உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற உள்ளுராட்சிசபைகளில் பலவும் முதலாவது அமர்வு ஆரம்பமாகவதற்கு முன்னதாகவே தள்ளாட தொடங்கிவிட்டன.
தவிசாளர் பதவி தொடர்பில் பரவலாக உள்ளக மோதல்கள் வெடித்துள்ளன.
வல்வெட்டித்துறை நகரசபையில் ஆகக்குறைந்தது இரண்டுவருடங்களிற்காவது தவிசாளர் பதவி தனக்கு தரப்படவேண்டுமென முன்னாள் பிரதிதவிசாளர் சதீஸ் கோரியுள்ளார்.வல்வெட்டித்துறை நகரசபை டெலோ வசம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெற்றி பெற்றவர்களுள் அவர் ஒருவர் மட்டுமே அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே பிரதி தவிசாளராக முன்னைய சபையில் இருந்த அவர் தவிசாளராக அனுமதிக்கப்படாது குழப்பப்பட்டதுடன் சபை பின்னர் கலைக்கப்பட்டுமிருந்தது.
இந்நிலையில் சதீஸ் தனது கோரிக்கையினை முன்வைத்துள்ளதுடன் ஆக்கபூர்வமான முடிவு தரப்படாவிடின் மாற்று முடிவுகளை தனது ஆதரவு உறுப்பினர்கள் சகிதம் எடுக்கவேண்டிவருமெனவும் எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது.
அதே போன்றே கரவெட்டி பிரதேசசபை, சுன்னாகம் பிரதேசசபை மற்றும் யாழ்.மாநகரசபையென பல சபைகளில் தற்போதே உள்ளக குழப்பங்கள் மூளத்தொடங்கிவிட்டது.
இந்நிலையில் பரஸ்பரம் பதவிகளின் அடிப்படையில் கட்சி மாற்றங்கள் தாவல்கள் பலவும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமது கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் புதன் கிழமை நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகள் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு அமைவாக நாளை மறுதினம் புதன்கிழமை, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பில் இந்தச்சத்தியப்பிரமாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.