வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கத்தின் உறவினர் ஒருவரை அதிபராக கொண்டுவர இலங்கை ஆசிரிய சங்கம் தரகு வேலையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இதற்கேதுவாக வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலய முன்னாள் அதிபர் தொடர்பான கோவையினை அது கையிலெடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய கந்தையா தனபாலசிங்கத்தின் நிதி மோசடிகள் முறைகேடுகள் – மிகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை இடமாற்றத்துடன் அவர் மன்னார் பாடசாலை ஒன்றிற்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அதிபர் வெற்றிடத்தை நிரப்ப கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தோற்றி கந்தையா தனபாலசிங்கம் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.
எனினும் அவரிற்கான நியமனக்கடிதத்தை வழங்காது சர்ச்சைக்குரிய கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தாமதித்துவருவதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த ஓமந்தை பாடசாலைக்கு கந்தையா தனபாலசிங்கத்தை அதிபராக நியமிக்க பாடசாலை அபிவிருத்தி சங்கம் கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த பாடசாலையின் பழைய மாணவர் என்ற அடிப்படையில் நிபந்தனைகளுடன் அவரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கதிரைக்கான போட்டியாளராக முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கத்தின் உறவினரொருவர் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக ஊழல் மோசடிகள் குற்றச்சாட்டுடன் குதித்துள்ள இலங்கை ஆசிரிய சங்கம் வடமாகாணக் கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் அவர்கள் தமது கட்சியின் வவுனியா அரசியலை பாதுகாப்பதற்காகவே – மிகப்பெரிய ஊழல்வாதிக்கு அதிபர் நியமனத்தை வழங்கியுள்ளரென கதையை மாற்றியமைத்துள்ளது.
நிர்வாக முறைகேடுகளிலும் அரசபண மோசடியிலும் ஈடுபட்டிருந்த ஒருவரை தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிப்பது அறநெறிகளைப் போதிக்கும் கல்விப் புலத்திற்குப் பொருத்தமற்றது என்பதுடன் – இவ்விடயம் தொடர்பாக – கௌரவ வடமாகாண ஆளுநரும் கௌரவ வடமாகாண முதலமைச்சரும் அதீத கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம்; கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதுவரை ஆளுநரால் பாதுகாக்கப்பட்டு வந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நேர்முகதேர்வில் தெரிவு செய்தமை தொடர்பில் அதிகாரிகளை கல்வி அமைச்சர் கண்டித்துள்ளார்.எனினும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் நியமனம் வழங்காவிடின் சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்குமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இ;ந்நிலையில் ஓய்வு பெறும் வயதை அண்மித்துள்ள குறித்த நபரை தூக்கியெறிந்து சத்தியலிங்கத்தின் உறவினரை நியமிக்க தற்போது ஆசிரிய சங்கம் களம் புகுந்துள்ளது.