யாழ் போராட்டக் களத்திலிருந்து மாவை விரட்டப்பட்டார்யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள்வாடி அமைத்து சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிப்பதற்கு எதிராகவும், குறித்த பகுதியில் சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களைக் கைது செய்யுமாறு கோரியும் இன்று திங்கட்கிழமை(11) காலை-09.30 மணி முதல் யாழில் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

இந்த நிலையில் குறித்த பேரணி ஆரம்பமாவதற்குச் சுமார் 45 நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வருகை தந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா போராட்டம் ஆரம்பமான யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர் சம்மேளன வளாகத்திற்குள் உட்பிரவேசித்திருந்தார்.

இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவை அங்கு கூடியிருந்த பெருமளவான இளைஞர்களும், மீனவர்களும் ஒன்றிணைந்து வெளியேறுமாறு கூச்சலிட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் அவரைத் தாக்கும் முனைப்பில் ஆக்ரோஷத்துடன் செயற்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது.

“நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இதுவரை எங்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன?”, “இது மக்கள் போராட்டம்…அரசியலுக்கு இங்கு இடமில்லை…”, “மண்ணெண்ணெய் விலையேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் நீங்கள் அரசியல்வாதிகளாகவிருந்து என்ன பயன்?” எனக் கடுமையாகக் கூச்சலிட்டதையடுத்து மாவை சேனாதிராஜாவும், அவரது குழுவினரும் அங்கிருந்து சடுதியாக வெளியேறி வந்த வாகனத்திலேயே திரும்பிச் சென்றுவிட்டனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila