விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் கடும் எதிர்ப்பை...

விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டும் தலைவர் சம்பந்தன் மட்டுமே - எஸ்.பி திசாநாயக்க தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன் விடுதலைப் புலிகள்மீதும் அதன் தலைவர் பிரபாகரனின் மீதும் கடும் எதிர்ப்பைக் கொண்டிருப்பவர் எனக் குறிப்பிட்டிருக்கும் எஸ்.பி திசாநாயக்க இரா.சம்பந்தன் சிங்களவர்கள் மற்றும் பௌத்தர்களின் ஒத்துழைப்புடன் வேலை செய்ய விரும்பும் ஒரு தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 'குழு16' நேற்று முன்தினம் சந்தித்து உரையாடியமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே எஸ்.பி திசாநாயக்க எம்.பி இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

இரா.சம்பந்தன் நாடு இரண்டாக பிரிவதனை ஒருபோதும் விரும்பாதவர்.  சம்பந்தன் எம்.பியினாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினராலோ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படவில்லை. சுதந்திரக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்களே அதன் தோல்விக்கு காரணமானார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு பிரபாகரனுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலம் நாட்டை தட்டில் வைத்து பிரபாகரனிடம் ஒப்படைத்தார். அப்போது நான் விவசாய அமைச்சராக இருந்தேன்.

அக்கால கட்டத்தில் வடக்கு செல்வதற்கு எல்.ரீ.ரீ.ஈயினரின் பாதுகாப்பு தேவைப்பட்டது" பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தமிழர் பிரச்சினை ஒருபோதும் தீர்த்து வைக்கப்படாது என்றும் அவருக்கு அதற்கான தேவை இல்லையென்றும் இரா.சம்பந்தனிடம் விளக்கி கூறினோம்.


அதேபோன்று தெற்கில் சிங்கள மக்களின் அதிக நம்பிக்கையை வென்ற கட்சியுடன் இணைந்து செயற்படவே விரும்புவதாகவும் சம்பந்தன் எம்மிடம் தெரிவித்தார் " என்றும் எஸ்.பி திசாநாயக்க எம்.பி தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila