வடமராட்சி கிழக்கில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதுடன் தென்பகுதி மீனவர்களுக்காக இராணுவ புலனாய்வாளர்கள் தமிழ் மீனவர்களை அச்சுறுத்தி வருகின்றார்கள், இது மோசமான இன மோதலுக்கு வழிவகுக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 123ஆவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது, குறித்த அமர்வில் கலந்து கொண்டு விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுடைய நிலங்களில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி நுழைந்து வாடிகளை அமைத்து அட்டை தொழில் செய்து கொண்டிருக்கின்றனர்.
இதனை தட்டிக் கேட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்களை கடற்படை புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் கடுமையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கடற்றொழில் சட்டங்களை மீறி அடாத்தாக தமிழ் மக்களின் காணிகளில் தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களை உடனடியாக வடமராட்சி கிழக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
மேலும் தென்பகுதி மீனவர்களுக்காக வடமராட்சி கிழக்கு தமிழ் மீனவர்களை அச்சுறுத்துவதை கடற்படை மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.
இல்லையேல் வடமராட்சி கிழக்கில் அமைதியின்மை உருவாகும். அங்கே பாரிய இனமோதல் உருவாகும். இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் மத்திய கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு தீர்வினை காணவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில்,
தென்பகுதி மக்களுக்காக எங்களுடைய மக்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவது அபாண்டமானது. அங்கே முஸ்லிம் மற்றும் சிங்கள மீனவர்கள் அடாத்தாக தங்கியிருந்து தொழில் செய்து வருகின்றனர்.
அவர்களுடன் எமது தமிழ் மீனவர்கள் மோதி பாரிய இனமோதல் ஒன்று நடப்பதற்கு சாத்தியங்கள் உள்ளது. எனவே இராணுவம் அல்லது இராணுவ புலனாய்வாளர்கள் இந்த விடயத்தில் தலையிடாமல் இருப்பது பொருத்தமானது. இதனை ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கு தெரியப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் இராணுவ புலனாய்வாளர்களின் செயற்பாடு மோசமான இன மோதலுக்கு வழிவகுக்கும்
Posted by : srifm on Flash News On 02:39:00
Related Post:
Add Comments