குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய ரசாங்க தரப்பிற்கும் இடையில் மோதல்கள் கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று முதல் அந்தந்த கட்சி சார்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்கள் பெயர் அந்தந்த கட்சியினரால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவங்ச, திலங்க சுமதிபால மற்றும் உதய கம்மன்பில என 7 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி விஜித ஹேரத் மற்றும் நளிந்த திசாநாயக்க ஆகியோரின் பெயரை முன்மொழிந்துள்ளது.
அதேவேளை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் வை சேனாதிராஜா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர்களை முன்மொழிந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி 5 பேர் கொண்ட குழுவை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அரச தரப்பில் 7, ஐக்கிய தேசிய கட்சி 5, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தாலா என மொத்தம் 16 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
குறிப்பாக 12 பேர் அங்கத்துவம் வகிக்கக்கூடிய தெரிவுக் குழுவில் அதிகளவான உறுப்பினர்கள் தங்களுடைய உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தங்களது கட்சிக்கே அதிக எண்ணிக்கை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்து வருகின்ற நிலையில் இந்த குழப்பங்கள் அதிகரித்து செல்கின்றது.
கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெற உள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9 மணிக்கு இடம்பெற உள்ள இந்த கூட்டத்தின் போது தெரிவுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


