ஜனாதிபதிக்கு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரின் மகள் காட்டமான கடிதம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார். முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை  என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க படுகொலை உட்பட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சி.ஐ.டி. அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள். உங்கள் முப்படைகளின் பிரதானியை பாதுகாப்பதற்காகவோ அல்லது வெள்ளை வான் மரணத்தின் மூலம் ஆட்சிபுரிபவர்களை  பாதுகாப்பதற்காகவோ நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என லசந்த விக்ரமதுங்கவின் மகள் ஜனாதிபதிக்கு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பது எனக்கும் தெரியாது. உங்களிற்கும் தெரியாது, நீங்கள் இடமாற்றுவதற்கு முன்னர்  நிசாந்த சில்வா மேற்கொண்ட ஓய்வற்ற குற்றவியல் விசாரணைகளின் அடிப்படையில் இதனை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை ஒரு சாட்சி என்ற அடிப்படையில் கேள்விகளிற்கு உண்மையான முழுமையான பதிலை வழங்குவது முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசத்தின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களை பொறுத்தவரை தனிப்பட்ட உறவுகள்,  அரசியல் தேவைகள், உங்கள் மனவிருப்பங்களைவிட சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கியமானது என குறிப்பிட்டுள்ள அகிம்சா,  உங்களை பொறுத்தவரை விசாரணையாளர்களிற்கு தேவையான வளங்களை வழங்குவதும் அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதுமே  முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila