சிறுபான்மையினரின் கதியென்ன? – சர்வதேசத்தை அழைக்கும் சிவில் சமூகம்

இலங்கையில் உயரிய சபையாகவும் ஜனநாயகத்தின் முழுவடிவமாகவும் உள்ள நாடாளுமன்றத்திற்கே குழப்ப நிலையென்றால் சிறுபான்மை மக்களின் நிலமை என்ன என்பதில் சர்வதேச சமூகம் அக்கறைகொள்ள வேண்டுமென சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே சிறுபான்மை மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசாங்கமும் முன்வரப்போவதில்லையென்பதை அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உட்பட பல்வேறு அமைப்புகள் இந்த கோரிக்கையினை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்துள்ளன.

வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை வழங்கும் வகையில் சர்வதேச சமூகம் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் சமூகத்தின் கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 30 வருடகால யுத்ததினாலும் இனமுரண்பாட்டினாலும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் மனநிலையினை புரிந்துகொள்ளும் நிலையில் இலங்கையில் உள்ள எந்த அரசாங்கமும் இல்லையென்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்ததின் பின்னரும் தமிழ் மக்கள பலதுன்பங்களை இன்னும் அனுபவித்தே வருகின்றனர்.அதன் காரணமாகவே 2015ஆம் ஆண்டு அரசியல் மாற்றம் ஒன்றை சிறுபான்மை சமூகம் ஏற்படுத்தியது.

அதன் காரணமாக இந்த நாட்டில் நல்லாட்சியொன்று ஏற்படுத்தப்பட்டது.அந்த நல்லாட்சியிலும் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காத நிலையில் அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சிறுபான்மை மக்களுக்கான தீர்வொன்றை வழங்கவேண்டும் என்ற புள்ளியொன்று வைக்கப்பட்டது.

டிசம்பர் 07ஆம் திகதி அரசியல்யாப்பு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நிலையிருந்தவேளையில் ஜனாதிபதி சிறுபான்மை சமூகத்தினை புறந்தள்ளி அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளோர் இன்று சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கருத்துகளையே மூலதனமாக கொண்டுசெயற்படுவதையும் காணமுடிகின்றது.இது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு ஆரோக்கியமான விடயமாக கருதமுடியாத நிலையிலேயே இருந்துவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகம் இந்த நாட்டில் சகல உரிமையினையும் பெற்று வாழும் நிலையினை இங்குள்ள பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் வழங்காது என்பதை அண்மைக்கால அரசியல் செயற்பாடுகளும் பாராளுமன்ற செயற்பாடுகளும் காட்டிநிற்கின்றன.

எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை வழங்கும் வகையில் சர்வதேச சமூகம் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும். அதற்கான அழுத்தங்களையும் செயற்பாடுகளையும் சர்வதேச சமூகம் முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila