ஆளுங்கட்சியும் இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்து குறித்த தீர்வுத் திட்டத்தை கைவிடும்.இலவுகாத்த கிளிபோல இருந்த தமிழ்த் தரப்புகள் மீண்டும் இலவங்காய் பழுக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பிற்காகக் காத்திருக்கும்.இந்த ஒழுங்குமுறையில்தான் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தமும் பழுக்கும் என்று கூட்டமைப்பு நம்புகிறது.
உண்மையில் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாக வேண்டுமாயின் அது தொடர்பான பிரசாரக்கூட்டங்களை அரசு நாடு முழுமையிலும் நடத்த வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை சிங்கள மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நெட்டூரத்தை தென்பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்துவதுடன் அந்தக் கொடூர சம்பவத்தின் காணொளிகளைக் காண்பிக்க வேண்டும்.
காலாகாலமாக தமிழ் மக்கள் பேரினவாதத்தால் அழிக்கப்படுகின்றனர் என்ற செய்தியை அறியாத சிங்கள மக்கள் ஏராளமாக உள்ளனர்.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சிங்கள மக்களை தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர் என்பதுதான்.
எனவே உண்மை நிலையைத் தெரியப்படுத்தாதவரை தென்பகுதியில் இருக்கக்கூடிய பேரினவாத ஊடகங்கள் தெரிவிக்கின்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையுமே நிஜமானவை என்று சிங்கள மக்கள் நம்புகின்ற நிலைமை நீடிக்கும்.
எனவே சிங்கள மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் எவரும் அங்ஙனம் செய்வதாக இல்லை.மாறாக இராணுவத்தின் வெற்றியைக் காட்டுவதற்கும் போரில் உயிரிழந்த இராணு வத்துக்காக அமைக்கப்பட்ட நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துவதற்குமாக சிங்கள மக்கள் வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.ஆக, இந்நிலைமை மாறாதவரை புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தமல்ல எதுவுமே சாத்தியமாகாதென்பது சர்வநிச்சயம்.


