குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
தாம் இராணுவத்திடம் கையளித்த உறவுகளின் நிலவரம் மற்றும் இராணுவத்தினராலும், இலங்கை அரச புலனாய்வாளர்களினாலும், வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட எம் உறவுகள் எங்கே என்று 10 வருடமாக நாம் கேட்ட வண்ணம் உள்ளோம்.
ஆனால் இன்று வரைக்கும் எவ்வித பதிலும் இலங்கை அரசினால் எமக்கு கிடைக்கவில்லை, சர்வதேசம் இதற்கான பதிலை நடக்கவிருக்கும் 40 ஆவது ஜெனிவா அமர்விலாவது இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்பதனை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு பொதுச்சந்தையூடாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகம் வரை தமது வேதனைகளையும், ஆதங்கங்களையும் கூறிய வண்ணம் பேரணியாக சென்றடையவுள்ளது.
எங்கே எங்கே உறவுகள் எங்கே? சர்வதேசமே உறவுகளை மீட்டுத்தா, பதில் சொல் பதில் சொல் அரசே பதில் சொல், எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும், சர்வதேசமே பதில் சொல், கையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே? போன்ற கோசங்களை எழுப்பியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும் 500 இற்கும் மேற்பட்ட தாய்மார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மகஜரினை மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடக பேச்சாளர் கே.தேவராசா தெரிவித்துள்ளார்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூட்டுக்கோபுரம் வரை சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு நின்றிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக பஜார் வீதி வழியாக ஹொறவப்பொத்தான வீதியூடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை வந்தடைந்து நீதிமன்ற வழியாக மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு வந்து பழைய பேருந்து நிலையத்தினை திரும்பவும் அடைந்து போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கு சர்வதேசம் நல்லதோர் பதிலை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூறி வடக்கு, கிழக்கு பொதுமக்கள், பொது அமைப்பினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

























மேலதிக தகவல் சதீஸ்