எங்கள் தமிழ் மொழியை நாங்களே ஒதுக்கித் தள்ளினால்...

உலகில் வாழுகின்ற இனங்களில் தன் இனத்தின் பெருமையை அறியாத ஓர் இனம் இருக்குமாக இருந்தால் அது தமிழினமாக மட்டுமே இருக்க முடியும்.

எங்கள் இனத்தின் பெருமையை நாங்கள்  உணராதபோது - அதை நினைத்து பெருமையடையாதபோது எம் இனத்தின் பெருமையை மற்றவர்கள் அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

உலகில் உள்ள மொழிகளில் தமிழ்மொழி காலத்தால் முந்தியது. இலக்கியச் செழுமை உடையது. பக்தி மொழி என்று போற்றப்படுவது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருக்குறளை உலகுக்கு தந்தது என்ற பெருமைகள் எங்கள் தமிழ் மொழிக்கு உண்டு.அதனால்தான் தமிழ் மொழியை செம்மொழியாக இந்த உலகம் ஏற்றுக் கொண்டது.
இருந்தும் தமிழ் மொழியைக் கற்பது இயலாமையின் நிலைமை என்று கருதப்படுமளவுக்கு தமிழ் மொழியை நாங்கள் விலக்கி வருகிறோம்.தவிர, ஆரம்பக் கல்வியைக் கூட ஆங்கிலத்தில் போதித்தால் நல்லது என்று நினைக்கின்ற அளவுக்கு எங்கள் நிலைமை வந்துவிட்டது.

இதன் வெளிப்பாடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கற்கின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவடைந்திருப்பதைக் காணமுடியும்.

தமிழ் மொழியும் அதனோடு இணைந்து இந்து நாகரிகம், இந்துசமயம் என்பவற்றைப் பட்டப்படிப்பாக மேற்கொள்வது கெளரவத்துக் குரியதல்ல என்று நினைக்கின்ற அளவில், எங்கள் மொழியை, எங்கள் சமயத்தை நாங்களே ஓரங்கட்டி வருகின்றோம்.

ஆனால் ஏனைய இனம் சார்ந்தவர்களும் மதம் சார்ந்தவர்களும் தங்கள் மொழியை; தங்கள் மதத்தைக் கற்பதைப் பெருமைக்குரிய விடயமாகக் கருதுகின்றனர்.

பெளத்த மதத்தைப் பொறுத்தவரை சிங்கள மாணவர்கள்  பெளத்தத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு ஏகப்பட்ட ஊக்குவிப்புகள் வழங்கப்படுவதுடன் பெளத்த மதத்துக்கான பிரிவேனாப் பாடசாலைகள் பெளத்தத்தை கல்வியாகப் போதிப்பதில் நிறுவனமயப்பட்டுச் செயலாற்றுகின்றன.

இதுதவிர; இந்தியா, யப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெளத்தத்தை கற்கவும் ஆய்வு செய்யவுமென கணிசமான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
இதேபோல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பட்டப்படிப்பாக மேற்கொள்வதில் முஸ்லிம் மாணவர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.தவிர, கிறிஸ்தவ நாகரிகத்தை படிப்பதில் அந்த மதத்தினர் மும்முரமாக இருப்பதும் கண்கூடு.

ஆனால் நாங்கள்தான் தமிழையும் சைவத்தையும் ஓரங்கட்டி எங்களை உயர்த்த நினைக்கின்றோம்.
இந்த இழி நிலை எங்களை விட்டு மாறாத வரை எங்கள் இனத்தின் எதிர்காலம் என்பது இருள் நிறைந்ததாகவே இருக்கும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila