பாலச்சந்திரன், இசைப்பிரியாவை இராணுவம் சுட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – மஹிந்தர்!

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும், இராணுவம் கைதுசெய்து சுட்டுக்கொன்றமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என, முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

போலிக் காணொளிகளையும், புகைப்படங்களையும் வைத்து படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவுக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்திய ஊடகவியலாளர்கள் போர்க்குற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறுவன் அல்ல என்றும், அவர் ஒரு போராளி என்றும், அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும், சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளியே அன்றி, அவருக்குப் புலிகள் அமைப்பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா என்றும் தெரிவித்தார்.

எனவே, அவர்கள் உட்பட பல போராளிகளின் உயிரிழப்புகளுக்குப் விடுதலைப் புலிகள் அமைப்பே பொறுப்புக்கூற வேண்டுமே தவிர, இலங்கை அரசாங்கம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12 ஆயிரத்து 500 போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளதனையும் நினைவுபடுத்தினார்.

இப்படிச் செய்த தன் மீதும், தமது போர் வீரர்களான படையினர் மீதும் சில சர்வதேச அமைப்புகளும், சில நாடுகளும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே, நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தம்மை பழிதீர்க்கும் வகையில் புலிகள் அமைப்புகள் தயாரித்த இந்த நிகழ்ச்சி நிரலுக்கு சில சர்வதேச அமைப்புகளும், சில நாடுகளும் ஒத்துழைத்தமையை நினைக்கும்போது கவலையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, சிலத் தீர்மானங்களை வைத்து தமது படையினரை எவரும் தண்டிக்க முடியாது என்றும், இதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் ஆணித்தரமாக கூறினார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila