பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் நேற்று (03) ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கையில் இனவாதத்தை எவரும் பேசக் கூடாது என ஆளுங்கட்சியினர் வலியுறுத்துவது எமக்குப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கின்றது.
எண்பது ஆண்டுகளின் முன்பிருந்த இலங்கையின்
ஆட்சியாளர்களிடம் இத்தகைய மனநிலை இருந்திருந்தால், தமிழினம் அடக்கப்பட்ட இனமாக, இனவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட இனமாக இத்தனை துயரங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.கடந்த காலங்களில் தமிழர் தரப்பால் அரசுகளோடு மேற்கொள்ளப்பட்ட எந்தப் பேச்சுகளும் எமக்குச் சாதகமாக அமையவில்லை என்ற நம்பிக்கையீனங்களைக் கடந்து, புதிய அரசின் ஆட்சிக் காலத்தில் இனவாதமற்ற இலங்கை நாட்டில் தமிழர்களது சுயநிர்ணய உரித்துகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகுமானால், நாங்கள் உங்களோடு இணைப்பங்காளர்களாகப் பயணிக்கத் தயாராக இருக்கின்றோம்.
இடதுசாரிக் கொள்கை அடிப்படையில் வளர்ச்சி கண்ட ஜே.வி.பியினரிடத்தே அடக்குமுறை இருக்காது என்றும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற மாக்சிசமும், லெனினிசமும், சேகுவேரா, மாவோ சேதுங் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைப் போக்கும் மேலோங்கியிருக்க வேண்டும் என்றுமே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் சிந்திய இரத்தமும், செய்த தியாகமும் இன்று உங்களை இந்தச் சிம்மாசனத்தில் ஏற்றியிருப்பதைப் போல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்களும், மக்களும் செய்த உயிர்த் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் எங்கள் இனத்தின் இருப்பை உறுதி செய்யும் நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.