மாகாணசபை தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மாகாணசபை என்பது வேறு. சம உரிமை என்பது வேறு என்பதை ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிந்துகொள்ள வேண்டும்.
மாகாண சபை என்பதை நாம் ஏற்கமாட்டோம். ஆனால், இன்றைய மாகாண சபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்கப் பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாகக் கூறியுள்ளார்.
இன்றும் பல தமிழ்த் தலைவர்களிடமும் அவர் இந்தக் கருத்தைக் கூறி இருப்பதை நான் அறிவேன்.
இப்போது “மாகாண சபையை அகற்றி விட்டு அதற்குப் பதில் நாடு தழுவிய, சம உரிமையைத் தருவோம்” என தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கூறுகின்றார்கள். சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சம உரிமை என்பது வேறு. அதிகாரப் பகிர்வு என்பது வேறு.
ஒருவேளை வடக்கு மாகாண மாவட்டங்களில் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாகக் கிடைத்துள்ளமையால், “மாகாண சபை என்பதை நாம் ஏற்க மாட்டோம்” என்ற பழைய ஜே.வி.பியின் கொள்கை நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு அதை அகற்ற ஆணை தந்துள்ளார்கள் எனத் தேசிய மக்கள் சக்தி நினைக்கின்றதோ எனத் தெரியவில்லை.
சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சுலபமான காரியம் அல்ல. இன, மத, மொழி ரீதியாக சம உரிமைகள் இந்த நாட்டில் உறுதிப்படுத்த இன்னமும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.
இங்கே இன்று அரசமைப்பிலேயே, இந்த நாட்டின் மொழிகள். மதங்கள் மத்தியில் சம உரிமை உறுதிப்படுத்தப்படவில்லை. அரச மதமான பௌத்த மதத்துடன் பௌத்த தேரர்கள், இந்த நாட்டின் அதிகார மையத்தில் இருக்கின்றார்கள்.
மொழி தொடர்பில் சில பலவீனமான சட்டங்கள் ஆங்காங்கே இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்த இந்த நாட்டின் அரச அதிகார வர்க்கம் இடம் கொடுப்பதில்லை. மொழிகள் மத்தியில் சம உரிமையை அமுல் செய்யப் படாதபாடு பட்ட எனக்கு இது நன்கு தெரியும்.
சம உரிமை என்பது வானத்தில் பறக்கும் அழகான பறவை. மாகாண சபை என்பது கையில் இருக்கும் பறவை. வானத்தில் பறக்கும் அழகான பறவையை பற்றி கனவு கண்டு கொண்டு கையில் இருக்கும் பறவையை விட்டு விடச் சொல்கின்றனவா ஜே.வி.பியும், தேசிய மக்கள் சக்தியும் எனக் கேட்க விரும்புகின்றேன்
சிங்கப்பூர் சிறிய நிலப்பரப்பு கொண்ட ஒரு நாடு. ஆகவே, அங்கே மாகாணங்களை அமைத்து அதிகாரப் பகிர்வு செய்ய முடியாது.
இருப்பினும், அங்கேயும், ஜனாதிபதிப் பதவி என வரும்போது, சீனர், தமிழர், மலாய் என மூன்று இனத்தவர்களும் மாறி மாறி பதவி வகிக்கும் முறையில் அரசியல் சட்டம் இருக்கின்றது. அவர்களது அமைச்சரவையில் அனைத்து சிங்கப்பூர் இனத்தவரும் இடம்பெறுகின்றார்கள்.
நல்லாட்சியின் போது, புதிய அரசமைப்பு உருவாக்கும் முயற்சி நடந்தது. அதற்கான வழிகாட்டல் குழுவில் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கத்துவம் பெற்று பணியாற்றினார். நானும் வழிகாட்டல் குழுவில் இடம்பெற்றேன்.
இன்னமும் பல இன, மத, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வழிகாட்டல் குழுவில் அங்கத்துவம் வகித்தார்கள்.
ஆகவே, அத்தகைய புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் போது, இவை பற்றி சிநேகபூர்வகமாகக் கலந்து உரையாடி, வாத, விவாதம் செய்து, தீர்மானங்களுக்கு வரலாம்.
எனவே, இப்போதே அவசரப்பட்டு, “மாகாண சபையை அகற்றியே தீருவோம். அது ஜே.வி.பியின் கொள்கை. அது மாறவில்லை.ஜே.வி.பியும், தேசிய மக்கள் சக்தியும் ஒன்றுதான்” என ஒருதலைப்பட்சமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் நண்பர் ரில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல."என அவர் கூறியுள்ளார்.