செட்டிகுளத்தில் பதிவு செய்யப்பட்ட காணாமற்போனோர் குறித்த கண்ணீர் சாட்சியங்கள்!


தந்திரிமலையில் நிலை கொண்டிருந்த இராணுவப் புலனாய்வாளர்களே எனது கணவனைக் கடத்திச்சென்றனர். எனவே நீங்கள் அரச உதவிகளைப் பெற்றுத்தருவதை விட எனது கணவரை மீட்டுத்தாருங்கள். இவ்வாறு காணாமற்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளார் பெண்ணொருவர். காணாமற்போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
தந்திரிமலையில் நிலை கொண்டிருந்த இராணுவப் புலனாய்வாளர்களே எனது கணவனைக் கடத்திச்சென்றனர். எனவே நீங்கள் அரச உதவிகளைப் பெற்றுத்தருவதை விட எனது கணவரை மீட்டுத்தாருங்கள். இவ்வாறு காணாமற்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளார் பெண்ணொருவர். காணாமற்போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
       
இதன்போது முதலாவதாகச் சாட்சியமளித்த பெண், 'எனது கணவர் 2008.03.06 அன்று கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளார்.இன்றுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை.' குறித்த தினத்தில் எனது கணவரும், நானும், எனது சகோதரி ஒருவரும் சிவராத்திரி பூசைக்காக எமது ஊரான வாரிக்குட்டியூரில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். இரவு வேளை நாம் சென்று கொண்டிருந்தபோது வீதியில், அரைக்காற்சட்டையுடன் நின்ற நால்வர் எனது கணவரைப் பெயர் சொல்லி அழைத்துக் கூட்டிச்சென்றனர். அன்றிலிருந்து அவருக்கு அன்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. கணவர் காணாமற்போவதற்கு முன்னரும், பின்னரும் எமது வீட்டை இராணுவத்தினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தனர். தந்திரிமலை இராணுவ முகாமைச் சேர்ந்த துசார என்ற பெயருடைய புலனாய்வாளரே எனது கணவர் பற்றியும் குடும்பம் பற்றியும் விசாரித்து வந்தார்.
எனது கணவர் காணாமற்போன சமயம் துசார என்ற அதிகாரியை நான் சந்திக்க முற்பட்டவேளை அவர் என்னைச் சந்திக்கவில்லை. கிராமிய அபிவிருத்திச் சங்கத்தில் இருந்த எனது கணவர் பொது வேலைகளை ஆர்வமாகச் செய்துவந்தவர். இதன் காரணமாக குறித்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே எனது கணவரைக் கடத்திச் சென்றனர்.- என்று அந்த பெண் சாட்சியமளித்தார். இதன்போது, 'உங்களுக்கு அரச உதவிகள் கிடைத்தனவா, வீட்டுத்திட்டம் கிடைத்தா?' என்று ஆணைக்குழு அதிகாரிகள் கேட்டதற்கு, சமுர்த்தி உதவி கிடைக்கிறது. எனக்கு இந்த உதவிகளைப் பெற்றுத்தர எண்ணுவதைவிட கணவனை மீட்டுத்தாருங்கள் என்றார் அந்தத்தாய்.
புலிகளே பிடித்துச் சென்றனர்!
தனது சகோதரனை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றனர் என்று வவுனியா, மகாசியம்பலாகஸ்கட என்ற இடத்தை சேர்ந்த எம்.கமர்தீன் என்பவர் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். தொடர்ந்து சாட்சியமளித்த அவர், அப்துல் மஜீத் என்ற 25 வயதான எனது சகோதரன் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி இரவு ஒரு மணியளவில் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டார். அந்தவேளை, நான் வீட்டின் பின்புறத்தால் ஓடி ஒழித்து நடப்பதை பார்த்தேன்.
பின்னர், விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் செல்வதற்கு பயத்தினால் எனது சகோதரனின் நிலை தொடர்பாக விசாரிக்கவில்லை. எமது கிராமத்தில் இருந்த 10 பேர் வரையில் அவர்கள் பிடித்துச் சென்றிருந்தனர். அவர்களின் உறவினர்களும் இன்று சாட்சியமளிக்க வந்துள்ளனர்' எனத் தெரிவித்தார்.
வௌ்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்ட ஆசிரியர்
சிவில் உடையில் வந்த சிலரே எனது மகனை வெள்ளை வானில் மதியம் 12.45 மணிக்கு கடத்திச் சென்றனர் என்று காணாமல் போன ரமேஸ்குமார் என்ற ஆசிரியரின் தந்தையான எஸ்.அருளானந்தம் சாட்சியமளித்தார். தொடர்ந்து அங்கு சாட்சியமளித்த அவர்,செட்டிகுளம், மாங்குளம் பாடசாலையில் தனியார் வகுப்பை முடித்துவிட்டு சைக்கிளில் வீதியால் வந்தபோது, நொச்சிக்குளத்தில் சிவில் உடையில் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டதை அவரிடம் கற்கும் மாணவர்கள் நேரில் கண்டு கத்தியவாறு வீட்டுக்கு வந்து எமக்கு அறிவித்தனர்.
எனினும், அவர்கள் வீரபுரத்தினூடாக வானில் எனது மகனையும் ஏற்றிச்சென்றனர். இது தொடர்பில் நாம் செட்டிகுளம் பொலிஸிலும் வவுனியா ஜோசப் முகாமிலும் முறையிட்டிருந்தோம். அதன் பின்னர் இராணுவத்தினர் வீட்டுக்கு வந்து விசாரணைகளை செய்தனர். ஆயினும், இதுவரை மகன் வரவில்லை என தெரிவித்தார்.
இராணுவத்தினர் பிடித்து மூன்று நாட்களின் பின் வீதியில் சுட்டுப் போட்டனர்!
வைத்தியசாலைக்கு சென்ற எங்கள் பிள்ளைகளை இராணுவத்தினர் பிடித்துச் சென்று மூன்று நாட்களின் பின்னர் வீதியில் சுட்டுப் போட்டனர் என காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் இரண்டு தாய்மார் சாட்சியமளித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சென்ற எங்களது பிள்ளைகள் அன்று வீட்டிற்கு திரும்பவில்லை. நாங்கள் அயலில் எல்லா இடமும் தேடினோம்.ஆனாலும் எவருக்கும் அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை. மாலையாகிவிட்டது. இராணுவ கட்டுப்பாடு என்பதால் பயம். அப்போது வெளியில் சென்றும் தேடமுடியாது.
மறுநாள் வைத்தியசாலைக்குச் சென்று தேடினோம். அவர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடையில் இருந்து விட்டு அன்றே சென்று விட்டனர் என்று தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றோம். அவர்கள் வேறு இடங்களுக்கு சென்றிருப்பர் 3 நாட்களின் பின்னர் வந்து முறைப்பாடு செய்யுமாறு கூறி அனுப்பினர். மறுநாள் வாரிக்குட்டியூரில் உள்ள இராணுவ முகாமிற்கு ஊர்மக்கள் அனைவரும் உழவு இயந்திரத்தில் சென்றோம். அங்கு நின்ற இராணுவத்தினர் இருவர் எம்மை மறித்து எங்கு செல்கின்றீர்கள் என விசாரணை செய்தார். நாங்களும் விடயத்தைக் கூறினோம்.
உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். அவர்கள் வருவார்கள் என்று எங்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். நாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். மறுநாள் காலை வாரிக்குட்டியூர் வீதியில் இருவரையும் சுட்டுவிட்டு போய்விட்டனர். அதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. குறித்த இரண்டு இராணுவத்தினரையுமே நாங்கள் சந்தேகத்தில் தெரிவித்தோம். ஆனால் குறித்த இருவரும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டும் வரவில்லை. பிள்ளைகள் இல்லை என்பதால் நாங்கள் 6 தவணைக்குப் பின்னர் நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை. என்றனர்.
இன்றைய அமர்விற்கு செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட 5 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் சாட்சியப்பதிவுகளுக்கு ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டனர். அழைக்கப்பட்டவர்களில் 33 பேர் சாட்சியத்திற்கு வந்ததுடன் மேலும் 36 பேர் புதிதாகவும் ஆணைக்குழுவில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இன்றைய சாட்சியமளிப்பிற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களுடைய உறவுகள் தொடர்பில் சாட்சியமளித்தனர். இராணுவம் , வெள்ளைவானில் வந்தவர்கள் , புலனாய்வு பிரிவினர் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகியோருக்கு எதிராக சாட்சியங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் இனந்தெரியாதவர்களாலும் சிலர் கடத்தப்பட்டுள்ளதாகவும் சாட்சியங்களை வழங்கினர். அதிகமான முறைப்பாடுகள் இராணுவத்திற்கு எதிராக இருந்தாலும் முஸ்லீம்களில் காணாமல் போனவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாலேயே கடத்தப்பட்டதாக உறவினர்கள் சாட்சியமளித்தனர். மேலும் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் வீட்டில் இருந்தவேளை இராணுவம் வந்து பிடித்துச் சென்றது என்றும் வெள்ளைவானில் கடத்திச் சென்றனர் எனவும் முள்ளிவாய்க்காலில் இராணுவ கட்டுப்பாட்டில் வைத்து காணாமல் போயினர் என்றும் பலர் சாட்சியமளித்தனர். இன்று ஆரம்பமாகிய அமர்வு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila