கட்சிகளை உடைக்கும் போர்

அடுத்த மாதம் நடக்கப் போவது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் அதன் போக்கு என்னவோ கட்சிகளை உடைப்பதற்கான போராகவே நடந்து கொண்டிருக்கிறது.
வரப் போகும் தேர்தல் ஆளும் கட்சிக்கும் எதிரணிக்கும் இடையில்எ மிகக் கடுமையான போட்டியாக அமைந்துள்ள சூழலில் கட்சிகளை உடைத்தும் ஆட்களை இழுத்தும் வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற வெறி இருதரப்பினரிடையேயும் காணப்படுகிறது.
இதன் விளைவாக இப்போது வாக்காளர்களிடம் வாக்கு கோருவதில் ஆர்வம் காட்டுவதை விட மறுதரப்பை உடைப்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
யார் எப்போது எந்தப்பக்கம் இருப்பார்கள் என்றே அனுமானிக்க முடியாத அளவுக்கு இலங்கை அரசியலில் இப்போது கட்சித் தாவல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னர் இதுபோன்றதொரு அரசியல் சூழல் எப்போதும் நிலவியதில்லை.
ஆளும் கூட்டணியிலிருந்து ஜாதிக ஹெல உறுமய விலகியதையடுத்து தொடங்கிய இந்தக் கட்சித் தாவல்கள் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரும் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவை தமது பக்கம் இழுத்து பொது வேட்பாளராக அவரை முன்னிறுத்தியது எதிரணியின் பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.
இது அரச தரப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தான் சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் காட்டிக் கொடுப்பு என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வர்ணித்திருந்தார்.
அதற்குப் பழிவாங்கும் வகையில் ஐதேக வின் பொதுச் செயலாளராக இருந்து திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அரச தரப்பு வலைவீசியது. முதலில் அரச தரப்புக்கு தாவப் போவதாக செய்திகள் வெளியான போதும் அவர் அதனை மறுத்திருந்தார்.. எனினும் கடந்தவாரம் அவரை அரசதரப்பு ஒருவழியாக தம்பக்கம் இழுத்துக் கொண்டது.
கத்திக்கு கத்தி, இரத்தத்துக்கு இரத்தம் என்று பழி தீர்ப்பது போலவே சுதந்திரக் கட்சிப் பொதுச்செயலாளருக்குப் பதிலாக ஐதேக வின் பொதுச்செயலாளரை இழுத்துக் கொண்டது ஆளும் கட்சி.
இது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐதேக வில் இருந்து ஆட்களை இழுப்பது ஒன்றும் தமக்குப் பெரிய வேலையல்ல என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
திஸ்ஸ அத்தநாயக்டகவுடன் ஒரு கோப்பி அருந்தி அவரைத் தம்பக்கம் இழுத்துக் கொண்டதாகவும், அதுபோல தான் நினைத்தால் ரணில் விக்ரமசிங்கவைக் கூட ஒரு தேநீரைக் கொடுத்து இழுத்து விடுவேன் என்றும் அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஒன்றை இழந்தால் இன்னொன்றை பெற்றுக் கொள்ளும் அசாத்தியமான திறமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல புகழ்ந்திருந்தார்.
இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடிந்தது. ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறமுடியும் என்பதற்காக திஸ்ஸ அத்தநாயக்கவை ஆளும் கட்சி தம்பக்கம் இழுக்கவில்லை.
அரசாங்கத்தை விட்டுச் செல்பவர்கள் இருந்தாலும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வோரும் இருக்கின்றனர். தமது செல்வாக்கு ஒன்றும் உடைந்து போகவில்லை எனறு காட்டவே அவரைத் தம்பக்கம் இழுத்திருக்கிறது அரசாங்கம்.
இந்தக் கட்சித் தாவல்களுக்கு,  பதவிகள், பல்வேறு சலுகைகள் பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்தப் பேரம் பேசலுக்காகவே அரசியலில் இருப்போரும் உள்ளனர்.
திஸ்ஸ அத்தநாயக்கவின் தாவலும், மைத்திரிபால சிறிசேனவின் பாய்ச்சலும் ஒப்பீடு செய்யக் கூடியவை அல்ல என்று அமைச்சர்களே கூறியிருக்கின்றனர்.
மைத்திரிபால சிறிசேன பணத்திற்காக எதிரணியின் பக்கம் தாவினார் என்றோ, பதவிக்காகச் சென்றார் என்றோ கருதுவதற்கில்லை. அதற்கான சூழலும் இப்போது இல்லை. அவர் ஜனாதிபதி பதவியை அடைந்தாலும் கூட 100 நாட்களுக்குள் அதனை இல்லாமல் செய்துவிடப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பிரதமர் பதவியை அவருக்கு வழங்க ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர். அது அவருக்கும் தெரிந்திருக்கும். எனவே பதவிக்காக எதிரணியின் பக்கம் அவர் சாய்ந்தார் என்று கூற முடியாது.
ஆனால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு தாம் ஒன்றுமே கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என்றாலும், அரச தரப்புக்குத் தாவிய ஒருசில நாட்களிலேயே சுகாதார அமைச்சராக பதவியை ஏற்றுக் கொண்டார்.
தான் எதற்காகவும் விலை போக மாட்டேன் என்று சில நாட்களுக்கு முன்னதாகவே அறிக்கை வெளியிட்டவர் அவர். பணத்தைப் பெற்றாரா இல்லையா என்பதை விட பதவியைப் பெற்றதன் மூலம் தாம் கட்சி தாவியதன் பின்னணியில் பதவிக்கான பேரம் இருந்துள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளார்.
தாம் இறந்த கிளியொன்றை இழந்து அழகிய பச்சைக்கிளி ஒன்றைப் பெற்றிருப்பதாக, ஹிருணிகா பிரேமச்சந்திர எதிரணிக்குத் தாவிய பின்னர் ஐதேக தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
அவசர் இறந்த கிளி என்று குறிப்பிட்டது திஸ்ஸ அத்தநாயக்கவைத்தான்.
மைத்திரிபால சிறிசேனவின் கட்சித் தாவல் போலவே ஹிருணிகாவின் கட்சித் தாவலும் அரசாங்கத்தைப் பாதித்துள்ள ஒன்றாகவே கருதப்படுகிறது.
அதனால் தான் சூட்டோடு சூடாக ஜாதிக ஹெல உறுமயவை உடைத்து உதய கம்மன்பிலவை தம்பக்கம் இழுத்துக் கொண்டது அரசாங்கம்.
அவர் ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவராகவே இருந்தார். வேண்டா வெறுப்புடன் தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்.
அவரைத் தம்பக்கம் இழுத்துக் கொள்வதில் அரசாங்கம் அவ்வளவாக சிரமப்பட்டிருக்காது. அரசாங்கத்துக்குள் இருக்கும் பல கட்சிகளும் இப்போது இதே சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
எதிரணிக்குப் பாய்ந்தால் தமது கட்சி உடைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறது. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் கடுமையான அச்சத்தில் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸினால் தெளிவான எந்த முடிவையும் எடுக்க முடியாதுள்ளமைக்கு பிரதான காரணம் கட்சி உடையும் ஆபத்தில் இருப்பது தான்.
கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல்களில் எதிரணியுடன் இணைய முற்பட்ட போதும், அரசதரப்புடன் ஒத்துழைக்க மறுத்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைக்கப்பட்டது.
பிரிந்து போனவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தனர். அல்லது புதிய கட்சி அமைத்து அரசின் நிழலில் தங்கிக் கொண்டனர். இப்போது கூட முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை ரீதியாக முடிவெடுப்பதா அல்லது கட்சியைக் காப்பாற்ற முடிவெடுப்பதா என்று தெரியாமல் குழம்பியிருக்கிறது.
ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழுவுக்குள்ளும் பிளவு ஏற்பட்டு விட்டது.
அதன் ஒருபகுதி மத்திய குழு உறுப்பினர்கள், எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க, அமைச்சர் திஸ்ஸ விதாரண தரப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கிறது.
இந்தக் கட்சித் தாவல்களில் இன்னொரு முக்கியமான விடயமும் நடந்தேறியிருக்கிறது.
மலையக அரசியல் களத்தில், அரச தரப்பில் இருந்து முக்கியமான மூன்று பாரளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
பெருமாள் இராஜதுரை, ப. திகாம்பரம் வே. இராதாகிருஸ்ணன் என மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் பக்கத்தில் இருந்து எதிரணிக்குத் தாவியிருக்கின்றனர்.
இவர்கள் தாம் எதிர்பார்த்தவை அரசதரப்பிடம் இருந்து கிடைக்காத ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எதிரணியுடன் இணைந்து கொண்டதால் மட்டும் நிறைவேறிவிடப் போவதில்லை.
மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் தான் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இப்போது எதிரணிக்குத் தாவியுள்ளவர்கள் அரசதரப்புக்குப் பாயவுள்ளவர்கள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகின்றன.
அதுபோலவே அவ்வப்போது கட்சித் தாவல்களும் நடக்கின்றன.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எதிரணியை உடைத்து, எவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதோ இப்போது அதிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அந்த நிலையையும் இழந்து நிற்கிறது.
மொத்தத்தில் இந்தத் தேர்தல் கட்சிகளை உடைப்பதற்கான, பலவீனப்படுத்துவதற்கான ஒரு போராகவே நடந்து கொண்டிருக்கிறது.
வரும் சாட்களில் இந்தக் கட்சி தாவும் போர், ஆள்பிடி அரசியல் என்பன இன்னும் தீவிரமடையும்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்தாலும் கூட அதில் வெற்றி பெறுபவரைப் பொறுத்து கட்சித் தாவல் இன்னும் அதிகமாகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை.
சுபத்ரா
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila