ரணிலிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் தமிழர் அரசியல்...!

இலங்கைத் தமிழனினம் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாற்றில் பதியப்படுவது ஒன்றும் புதிதானதன்று. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த நிலமை ஏற்பட்டுள்ளமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
இலங்கையின் பகுதி முழுவதையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தனர் இயக்கர் நாகர்கள். இவர்கள் ஈழ தேசத்தின் சொந்தக்காரர்களாக, பூர்வீக குடிகளாக நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து வந்தனர்.
குவேனியை ஆரிய இளவரசன் மணந்து கொண்டு இலங்கை ஆட்சி உரிமையை பெற்றுக்கொண்டதில் இருந்து தொடங்கிற்று தமிழர்களின் அழிவு அரசியல்.
இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட இளவரசன் விஐயன் எவ்வாறு தந்திரமாக இலங்கை அரசு உரிமையைப் குவேனியிடமிருந்து பெற்றுக்கொண்டானோ அதே போலவே நமது இன்றைய அரசியல் நிலமைகளும் நீண்டு செல்கின்றது.
வரலாற்று நிகழ்வுகளை மறந்து நாம் அரசியல் நடத்துவதும், கலந்தாலோசனை நடத்துவதும் நமது இனத்திற்கு விடிவைத் தராது. மாலைகளுக்கும், மேடைப் பேச்சுக்களுக்கும் கதிரைகளுக்கும் இன்று அடிமையாகிக்கிடக்கின்றோம் என்பது தான் இன்றைய அரசியல் யதார்த்த நிலைமை.
அதற்கு அப்பால் ராஐதந்திரம் என்று சொல்லிக்கொள்வதற்கு எதுவும் இல்லை. ஒரு முறை நமது அரசியல் வரலாற்றினை எடுத்து நோக்கினால் புரிந்து கொள்ள முடியும் ஏன் இந்த நிலமை என்று. குவேனியின் அறியாத்தன்மையும், விஐயன் என்னும் ஆரியனின் ஏமாற்றுத்தந்திரத்திற்கும் அன்று நமது மூதாதையர்கள் இலகுவாக மயங்கியதால் இன்று வரை எம்மால் தலை நிமிர்ந்து கொள்ள முடியவில்லை. இது நமக்கான சாபக்கேடு என்று வார்த்தையால் சொன்னால் அந்த வார்த்தைக்கு அர்த்தம் அது தான் அன்றி வேறேதும் இருக்காது.
நாம் இழந்ததும் ஏமார்ந்து போனதும் அதோடு நின்றுவிடவில்லை, 44 ஆண்டுகள் அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளனிடம் இருந்து சூழ்ச்சிகள் நரித்தந்திரங்கள் மூலம் தமது தமிழினப்பழி தீர்த்தலை செய்து கொண்டது சிங்கள தேசம்.
அனுராதபுர இழப்பிற்கு பின்னர் எமது அரசியல் நிலப்பரப்பும் குறுகிப்போனது காலங்கள் நகர்ந்து செல்ல, உலகம் அரசியல், பொருளாதார, விஞ்ஞான வளர்ச்சிகளை பெருக்கிக்கொள்ள தமிழர்கள் இன்னமும் இழப்புக்களோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய சூழலை எப்போதுமே நிஐத்தில் கண்டுகொண்டிருக்கின்றோம்.
தமிழர்களுக்கான அரசியல் நிலப்பரப்புக்குள் குறுகிக்கொண்டு செல்ல யாழ்ப்பாண இராச்சியமே எமக்கானது என்று இருந்தது. அதுவும் போர்த்துக்கேயர்களிடம் 1621ஆம் ஆண்டு வீழ்ந்தது.
1621ம் ஆண்டோடு எங்கள் அரசியல் நிலமை அந்தோகதி என்றாகி எதிர்த்துப் பேசுவோர் யாருமின்றி தமிழர் தரப்பு அநாதையிலும் அநாதையாயிற்று.
மீண்டெழுந்து எமது இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத அரசியல் நிலையில் இருக்கையில் இலங்கை முழுவதும் 1818 ஆம் ஆண்டு பிரித்தானியர்களின் முழுக்கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வரப்பட்டது.
இது வரலாறு என்றால் அன்றைய காலகட்டங்களில் எமக்கான அரசியல் பகுதியாக இருந்த குறுகிய நிலப்பகுதிகளும் இல்லை என்று ஆயிற்று. 1833 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசின் ஆணைக்குழுவான கோல்புரூக் கமரூன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி நாடு முழுவதும் ஒரே நிர்வாக அலகாக்கப்பட்டு பிரித்தானியர்களின் முழு ஆட்சிப் பிரதேசமாக்கப்பட்டது இலங்கை தேசம்.
ஆனால் அடுத்தடுத்து பிரித்தானியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு இலங்கையின் சிங்களத்தரப்பு போராட்டங்களை நடத்திய வேளை தமிழர் தரப்பும் தமது பங்கிற்கு இணைந்து கொண்டதோடு, காலப்போக்கில் தமிழர் தரப்பு படித்த ஆங்கில அறிவுள்ள தரப்பாக மாறியதால் சேர். போன்ற பட்டங்களையும் பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டதோடு, சிங்களத்தரப்பின் விடுதலைக்காகவும் போராடியது.
கைது செய்யப்படும் சிங்கள போராட்டக்காரரின் விடுதலைக்கும் அயராது உழைத்தனர் படித்த தமிழர்கள். அதுவே பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது சிங்களத்தரப்பிடம் கொடுத்த அதிகாரங்களை சரியாக கூறு போட்டு பெற்றுக்கொள்ளாமல் வாய் பார்த்த தலைவர்களாக தமிழ்த் தலைவர்கள் நின்று கொண்டனர். அவர்களின் இந்த செயற்பாட்டு தன்மையே பின்னாட்களில் ஏராளம் தமிழ் இளைஞர்களின் உயிரை பறிக்க உதவியது எனலாம்.
இவ்விதம் தமிழ்த்தரப்பு ஏமாந்த ஏமாற்றப்பட்ட இனமாக இருந்ததால் திடீர் அலை ஒன்று விடுதலைப் போராட்ட அலையாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட அதையும் எப்படியாவது அழித்து சின்னாபின்னமாக்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டி நின்றது இலங்கை அரசாங்கங்களும், இந்திய தேசமும்.
பெருமூச்சாய் வீச்சாய் எழுந்த தமிழ் இன விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு எல்லாம் சிதைக்க முடியுமோ அவ்வாறு எல்லாம் சிதைப்பதற்கு நடந்த திருவிளையாடல்கள் தான் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த புலிகளை சமாதான ஒப்பந்தத்திற்கு இழுந்து வந்த ரணிலின் திருவிளையாடல்.
ஆயுத பலத்திலும், அரசியல் பலத்திலும் இலங்கை அரசாங்கத்திற்கு இணையாக இருந்த அல்லது ஒருபடி மேலே நின்ற புலிகளை பேச்சு மேடைக்கு அழைத்து ஒப்பந்தம் போட்டு கையெழுத்தும் வாங்கிக்கொண்டார் அப்போதைய மற்றும் இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அந்த ஒப்பந்தமே தமிழர்களின் நிமிர்ந்து எழுந்த அரசியல் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ரணிலின் வித்தைகள் புலிகளை உலகில் இருந்து ஓரம் கட்டவும், உள்நாட்டில் பிரச்சினை இல்லை என்று காட்டவும், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் இது நமது பிரச்சினை என்று சொல்லவும் தமிழர்களின் அரசியல் பேரம் பேசும் சக்தியாக இருந்த புலிகள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
மீண்டும் ஆட்சி மாறியது. அதோடு அரசியல் அரங்கில் பல காட்சிகள் மாறின. 2006 ஆண்டு தொடங்கியது யுத்தம், 2009 மேயில் முடிந்தது தமிழர்களின் அரசியல் கனவு, தாகம்.
இப்போது மீண்டும் ஆட்சி மாற ரணிலின் கனவில் ஏற்பட்ட காட்சி புதிதாக உருவெடுத்திருக்கிறது உத்வேகம் கொண்டிருக்கின்றது. பிரதமர் பதவியை பெற்றுக்கொண்ட ரணில் இப்போது தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்.
இத்தேசிய அரசாங்கமே தமிழர் தேசியத்திற்கு அணுகுண்டை போடும் பீரங்கி. ஆம், பிரதான ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி என்று எல்லாமே ஒரு கட்சியாய் ஓரணியாய் ஒன்று சேர்ந்து நிற்க, யார் யாரை விசாரிப்பது. யார் யாரை கேள்வி கேட்பது என்று ஒரு குழப்பம் வர, எந்த தீர்மானம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டாலும் அந்த தீர்மானம் பெரும்பான்மை பலத்தால் நிறைவேறும்.
எனில் 13வது சீர்திருத்தத்திற்கு அப்பால் செல்ல கூடாது என்று ஒரு கடும்போக்கு கட்சி தீர்மானம் கொண்டு வந்தால் நிலமை சொல்லி விளக்க வேண்டும் என்று இல்லை.
ஆக, திருடர்கள் எல்லோரும் ஒரு அணியில் இருந்துகொண்டு எந்த திருடர்களைப் பற்றி பேசுவார்கள்? இவர்கள் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பார்களா? என்று சிந்தித்தால் அறவே தீர்வு கிடைக்காது.
மகிந்தர் சொன்னார் இது ஒரே நாடு ஒரே தேசம், ஒரே மக்கள் என்று. ரணில் சற்று வித்தியாசமாக இது ஒரு நாடாளுமன்றம், ஒரு அரசாங்கம். முழுப் பாராளுமன்றமும் அரசாங்கம்.
மகிந்தரின் கனவுகளுக்கு ரணில் உயிரூட்டுகின்றார். தேசிய அரசாங்கம் அமைந்த கையோடு முதலில் வாழ்த்துக்கள் தெரிவித்தது மகிந்த ராஜபக்ச என்பதில் இருந்து தெளிவு வரவேண்டாமா நமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு.
சர்வதேச விசாரணை வேண்டாம். நமது நாட்டு இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டோம், இது உள்நாட்டுப் பிரச்சினை, 13வது சீர்திருத்தத்திற்கு அப்பால் செல்ல மாட்டோம், இனப்படுகொலை பற்றி தீர்மானம் நிறைவேற்றிய வடக்கு முதல்வரை சந்திக்க மாட்டேன் என்று ரணில் தெரிவிப்பதும், த.தே.கூ விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கவிட மாட்டோம் என்று இப்போதே ஆயிரம் கதைகள் வெளிவருகின்றன. இனி இழக்க என்ன இருக்கிறது?
எஸ்.பி.தாஸ்
puvithas4@gmail.com
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila