முஸ்லிம்கள் தமிழர்களை கூறுபோட்டு அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்கள்: த.கலையரசன்

அம்பாறை மாவட்டத்தில் அன்று சிங்களவர்கள், இன்று முஸ்லிம்கள் தமிழர்களை கூறுபோட்டு அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் உறுதியாக இருந்து செயற்பட முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களையும் ஒன்றிணைத்து மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று நேற்று இடம்பெற்றது. நாவிதன்வெளி 15ம் கிராமம் மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்.அனுராஜ் தலைமையில் இந்த கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் ஏனைய அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.குணரெத்தினம், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், பாடசாலைகளின் அதிபர்கள், கிராம அபவிருத்திச்சங்க தலைவர்கள், ஆலயங்களின் தலைவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

48 கழகங்கள் பங்கு பற்றிய இறுதிப் போட்டி கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தினரும் திருக்கோயில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினரும் மோதி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இவ்வாண்டிற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது இடத்தினை பெற்றுக் கொண்ட கழகத்திற்கு வெற்றிக் கிண்ணமும் 10000 ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
அம்பாறை மாவட்டமானது 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டக்களப்புடன் இணைந்து பட்டிப்பளையாறு என்ற தமிழ்ப்பெயருடன் சகல நடவடிக்கையினையும் முன்னெடுத்து வந்தது.
அதன்பின்னர் இங்கு சிங்கள மக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்குடன் நன்கு திட்டமிட்டு கல்லோயத்திட்டத்தினை ஏற்படுத்தி, சிங்கள குடியேற்றங்களை அமைத்து 1953ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தினை உருவாக்கினார்கள்.
இவர்களது திட்டமிட்ட செயற்பாடு காரணமாக தமிழர் பிரதேசங்களும், தமிழ்ப்பெயர்களும் அழிக்கப்பட்டு தமிழர் வாழ்ந்த தடயங்களே இல்லாமல் செய்தார்கள். இவ்வாறான சூழலில்தான் தமிழர்கள் அன்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கல்லோயாத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டமாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்று திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அன்று பெரும்பான்மை இனமாகிய சிங்களவர்கள் செய்த அதே செயற்பாட்டினை இன்று சிறுபான்மை சமூகமாகிய முஸ்லிம்கள் செய்துகொண்டு வருகின்றார்கள். அதற்கு பல ஆதாரங்களை முன்வைக்க முடியும்.
அதிலும் குறிப்பாக கல்முனை தமிழ்ப் பிரதேச சபையினை உருவாக்குவதில் சிங்களவர்களைவிட முஸ்லிம்கள் கண்ணும் கருத்துமாக இருந்து அதனை தங்கள் வசம் ஆக்கிரமிக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
இன்று இலங்கை அரசின் பங்காளிக்கட்சியாக இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது த.தே.கூட்டமைப்பானது, எங்களது மக்கள் நலன் சார்ந்த விடயத்தில் தீர்வுகான முன்வர வேண்டும்.
அவ்வாறு தீர்வுகாண முன்வராவிட்டால் அரசாங்கத்துடன் பங்குதாரர்களாக இருந்து செயற்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இன்று த.தே.கூட்டமைப்பினை சீரழிப்பதற்கும் அதனை கூறுபோடுவதற்கும் சில சக்திகள் மிகவும் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் சதிவலையில் எவரும் சிக்காமல் தன்மானமுள்ள, எவருக்கும் அடிபணியாத தமிழனாக இருந்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்;டவேண்டும்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஆயுத கலாசார அராஜகம் நடந்தேறிய காலங்களில்கூட எமது இளைஞர்கள் தேசியத்தினை பலப்படுத்தி இந்தப்பிரதேசத்தினை 2006இல் இருந்து கட்டிக்காத்து நிலையான அரசியல் கொள்கைகளை முன்னெடுத்து இன்றும் உழைத்து வருகின்றார்கள்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில இளைஞர்கள் த.தேசியத்திற்கு மாறாக செயற்பட்டு த.தே.கூட்டமைப்பினை அழிக்கவேண்டும் என்றும், த.தே.கூட்டமைப்பு தமிழ்மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்ற தோரணையிலும் எமது இளைஞர்களை திசைதிருப்ப முனைகின்றார்கள்.
இதனை கருத்தில் கொண்டு இம்மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்ட அனைத்து இளைஞர்களும் எதிர்காலத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இம்மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல தமிழ்க் கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றது. அந்த உண்மைகள் இதுவரைக்கும் வெளிவராமல் கிடப்பிலே கிடந்திருக்கின்றது.
அண்மைக்காலமாகத்தான் அம்பாறை மாவட்டத்தின் தமிழர்களது நிலை தொடர்பாக வெளிவராத உண்மைகள் பல ஊடகங்கள் வாயிலாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாகிய இருவரும் வெளிவரச் செய்திருக்கின்றோம்.
அம்பாறையில் உள்ள தமிழர்கள் பல கொடுமைகளையும், பல இழப்புக்களையும் சந்தித்தவர்கள் அவர்களுக்குத்தான் தெரியும். அதன் வலியும் வேதனையும் இதனை த.தே.கூட்டமைப்பின் தலைமைகள் கருத்தில் எடுத்து எதிர்காலத்தில் அம்பாறை இம்மாவட்ட மக்களின் துயர்துடைக்க முன்வரவேண்டும் எனவும் கூறினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila