1997 ஒக்டோபரில் அப்போதைய சிறீலங்கா ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, சிறீலங்காஅரசாங்கத்தின் நிதிநிலை தொடர்பான உயர்அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றும்போது “விடுதலைப்புலிகள் பௌத்த மத நிறுவனங்கள் மேல் தாக்குதல் நடாத்தினால் ஜனாதிபதியான தானே தெருவில் இறங்கி தமிழர்களை தாக்குவேன்” என்று கூறியிருந்தார்.அந்த நேரம் இந்த உரை பலத்த கண்டனங்களுக்கும் கோபத்துக்கும் உள்ளானது.
இதனை போன்ற நேரங்களில்தான் சிங்களத்தை காப்பதற்கென்றே ஆபத்பாந்தனாக சில தமிழ் தலைகள் புறப்படுவது வழமையானதுதானே. அந்த நேரத்தில் நீலன்திருச்செல்வம் தமிழர்விடுதலைக் கூட்டணியை சேர்ந்த ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரில் சந்திரிகாவுக்கு நற்சாட்சி பத்திரம் வழங்கிய கடிதம் ஒன்றை எழுதி அந்த நேரம் சந்திரிகாவை காப்பாற்றினார்.
சிங்களதேச அதிபருக்கு உள்ளே பதுங்கி உறங்கி கிடந்த சிங்களபேரினவாத சிங்கம் எழுந்து உறுமி இனவாதம் கக்கியதை மறைப்பதற்காக ஒரு தமிழ் மேதாவி(?) இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் கையெழுத்தை பொய்யாக போட்டு கடிதம் தயாரிக்கும் அளவுக்கு சிங்களபேரினவாதத்தின் தாங்குதூண்களாகவே நின்றிருந்தார்கள் நீலனும் அந்த பா.உம்.
இதனைப்போன்றே இனப்படுகொலையாளியான ஜேஆரின் தமிழின அடக்குமுறைக்கு அங்கீகாரம் வழங்குவதுபோன்ற ஒரு செயலை 83ம்ஆண்டு மார்ச்மாதம் அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் செய்தார்.83 மார்ச் மாதம் பனாகொடை ராணுவமுகாமில் சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழவிடுதலை இயக்கதலைவர் தங்கத்துரையை இப்போது கனடாவில் வசிக்கும் சோழனின் பெயர் கொண்ட ஒரு சட்டத்தரணியின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் சந்தித்த அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மறுநாள் தங்கத்துரை அவர்களின் பெயரில் ஒரு அறிக்கையை தமிழீழவிடுதலைக்கு எதிராக விடுத்ததும் இத்தகைய சிங்களத்துக்கு ஆதரவான ஒரு செயலாகவே இருந்தது.
இப்படி நிறைய உதாரணங்களை காலகாலத்துக்கு வந்த தமிழ்தலைவர்கள் என்று சொல்லப்பட்டோர் செய்ததை, செய்துவருவதை எழுத முடியும்.இதனை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம் விரிவாக.
இப்போது ஏ சுமந்திரனுக்கு வருவோம்.
இனப்படுகொலையை கடந்த அறுபதுஆண்டுகளாக ஒருவித குற்றஉணர்வுமின்றி (அது சிறீலங்காவில் தண்டனைக்கான குற்றம் அல்ல..குற்றமே அல்ல) செயற்படுத்திவரும் சிங்களபேரினவாதத்துக்கு பேரிடியாக இல்லாதுவிட்டாலும்கூட, ஒரு சிறு தலையில் குட்டாக வைக்கப்பட்ட சர்வதேசநீதிபதிகள் அடங்கிய விசாரணை என்ற மனிதஉரிமை ஆணையரின் அறிக்கைக்கு ஒரு உப இலவசஇணைப்பாக சுமந்திரன் ‘ நமது பெயரால் மற்றவர்களுக்கு இழைத்த கொடுமைகளை’ பற்றி நிறையவே சொல்லி இனஅழிப்பையும் விடுதலைக்கான போர் ஒன்றில் விடுதலைஅமைப்பு செய்யும் செயற்பாட்டையும் ஒரே தராசில் வைத்து சிங்களத்தை ஆசுவாசப்படுத்தி இருக்கின்றார்.மனிதஉரிமைகளை விடுதலைப்புலிகளும் மீறி இருக்கிறார்கள் என்று சம்பந்தன் ஒருமுறை பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூறியதற்கு அச்சொட்டு பிசகாமல் இப்போ சுமந்திரன் ‘ நமது பெயரால் பிறருக்கு கொடுமைகள் செய்தவர்கள்’ பற்றி சொல்லி இருக்கிறார்.சிங்களபேரினவாதம் செய்த இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிக்கும் ஒருவிதமான தந்திரமே இது.
சுமந்திரன் வக்காலத்து வாங்கும் அந்த ‘பிறர்’ முப்பதுஆண்டுகளாக எம்மை ஏறிமிதித்தபோதும்,தெருக்களில் நாயே,அடிமையே,கூலியே என்று இழிவுபடுத்தியபோதும்,எல்லாவற்றிலும் மேலாக கலவரம் என்ற பெயரில் எம் மக்களை கொன்றுகுவித்து சொத்துகளை அழித்து வெறியாட்டமாடியபோதும் இந்த இனம் அந்த பிறருக்கு ஏதும் கொடுமைகளை செய்தது இல்லை..
போராடுவதற்காக கையில் எடுத்த அனைத்து அமைதிவழிகளும் அடைக்கப்பட்ட பின்னர் வேறு வழியின்றித்தான் அந்த பிறரை ஆயுதரீதியில் எதிர்த்து தற்காத்து போரிடும் நிலைக்கு தள்ளப்பட்டது..
எங்களின் தேசியத்தலைவனின் வரிகளில் சொல்வதானால் ‘ ஜேஆர் ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது..என்பதே.
தொடர்ச்சியாக கொடுமையான அடக்குமுறைக்கும், இனஅழிப்புக்கும், சித்திரவதைக்கும் உள்ளான ஒரு தேசியஇனம் இனி வேறுவழியில்லை என்று எழும்போது அது இயல்பாகவே ஆயுதப்போராட்டத்தை தழுவிக்கொள்ள வேண்டியதாக வரலாறு விதித்துவிடுகிறது.இதனையே தமிழீழவிடுதலைப்புலிகளின் போராட்டவரலாறு (1975-1985) என்ற நூலில் ‘ “சிங்களஇனவெறி அரவு கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான இனஅழிவு தழுவிய ஒடுக்குமுறையில் இருந்து தமிழ்மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு எந்த வழியும் இருந்திருக்கவில்லை.தமிழ்மண்ணில் தோற்றம் கொண்ட ஆயுதஎதிர்ப்பு இயக்கத்தை வளர்ச்சியும் விரிவாக்கமும் அடைந்த தமிழரின் அரசியற்போராட்டமாகவே நாம் கருதவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதை சுமந்திரன்கள் மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.
அரச ஒடுக்குமுறையையும் இனஅழிப்பையும் எதிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே ஆரம்பத்தில் தோற்றம் கொண்ட ஆயுதஎதிர்ப்பு இயக்கம் சிங்களபேரினவாத ஒடுக்குமுறையும் இனஅழிப்புகளும் கூர்மை அடைந்து எமது மக்கள் அப்பாவிதமிழர்கள் கூட்டம்கூட்டமாக கொல்லப்பட்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக புரட்சிகர எதிர்த்தாக்குதல்களை நடாத்தியே தீரவேண்டிய ஒரு வரலாற்று அழுத்தத்தை சிங்களம் எம்மீது திணித்தது.அதன் வெளிப்பாடுகளாக ஏற்பட்ட அனைத்து அழிவுகளுக்கும் சிங்களபேரினவாதமும் அதற்கு முண்டுகொடுத்து நின்ற நிற்கும் சக்திகளும்தான் பொறுப்பேதவிர தமிழினமும் அதன் விடுதலைக்காக போராடிய அமைப்பும் அல்ல.
இதனை புரிந்துகொள்ள சுமந்திரன்கள் உ லக விடுதலைவரலாறுகளையும் புரட்சிவரலாறுகளையும் கொஞ்சம் படித்துப்பார்க்க வேண்டும்.இந்த யதார்த்தத்தை உலக விடுதலைஅமைப்புகள் அனைத்தினதும் சரித்திரங்களில் காணலாம்.
சிங்களதூதரக அதிகாரிகளுடன் விருந்துண்ணும் நேரத்திலும்,சிங்கள பேரினவாதத்தை இன்னும் என்ன என்ன முறையில் தாங்கி முண்டுகொடுக்கலாம் என்று சிந்திக்கும் நேரத்திலும் ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி இவற்றை சுமந்திரன்கள் படித்துபார்க்கலாம்.
மறுக்கப்பட்ட நீதிக்காக முழு இனமும் எழுந்து கண்டங்கள் கடந்து போராடிவரும் இந்நிலையில் சுமந்திரன்கள் எதற்காக இப்படி ‘ நமது பெயரால் பிறருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை’ எழுதி சிங்களத்துக்கு வக்கலாத்து வாங்குகிறார்கள் என்பது ஒன்றும் பிரம்மரகசியம் அல்ல.சிங்களம் எறியும் அற்ப எலும்புகளுக்காகவும் அது போடும் சொகுசு வாகனங்கள் மற்றும் வசதிகளுக்காகவுமே ஆகும்.
எமக்காக போராடிய அமைப்பு வெறுமனே சும்மா அலுவலகத்தில் இருந்துகொண்டு கட்டுக்கட்டாக கோப்புகளை(பைல்கள்) களை தூக்கி கொண்டு அதற்குள் சரத்துகளை வெட்டியாக தேடிக்கொண்டிருந்தவர்கள் அல்ல.அற்ப பதவிகளுக்காகவும் தமது குடும்பம் பிள்ளைகள் சுகமாக வாழவேண்டும் என்பதற்காகவும் போராடியவர்கள் அல்ல.
தமது உயிர் வாழ்வு இளமை குடும்பம் என்று அனைத்தையும் அர்ப்பணித்து போராடியவர்கள்.தாங்கொணாத கடும் உடல்வலிகள் பசி விழுப்புண்கள் என்பனவற்றுக்கு மத்தியில் மிக நீண்டதூரங்களை பாரங்களுடன் கடந்து நடந்து எமக்காக போரடிய எம் செல்வங்களின் செயல்கள் ஒவ்வொன்றையும் வரலாற்று ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் உலக சரித்திரரீதியாகவும் நியாயப்படுத்தும் உரிமையும் வலுவும் எம்மிடம் உண்டு.
சுமந்திரன்கள் என்னதான் சுத்திவளைத்து எழுதி எம் விடுதலைப்போராட்டம்மீதும் அதன் அமைப்புமீதும் காழ்ப்பும் வஞ்சமும் உமிழ்ந்தாலும் அதனை எதிர்க்கும் தார்மீக உரிமையும் அறமும் எமக்கு உண்டு.உலக தமிழினம் முழுமையும் இதனையே செய்யும். மிக நீண்ட வரலாறுகளை படிப்பதற்கு நேரம் இல்லாதுவிட்டாலும்கூட சுமந்திரன் திருவள்ளுவரின் திருக்குறளை அதிலும் இந்த குறளை கொஞ்சம் திரும்பதிரும்ப படித்து பார்ப்பது மிக நல்லது.
“யாகாவர் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு “


