ஆர்ப்பரித்தெழும் வெற்றியுமல்ல! துவண்டுபோய்விடும் தோல்வியுமல்ல!

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிவரும் நிகழ்வுகளும் தமிழர்களைப் பொறுத்தவரையில், ஆர்பரித்தெழுந்து கொண்டாடும் வெற்றியுமல்ல, எல்லாம் முடிந்ததென்று துவண்டுவிடும் தோல்வியுமல்ல என்பதே உண்மைநிலையாகும்.
இத்தேர்தல் முடிவு குறித்து வெளிவரும் ஆக்கங்கள், விவாதங்கள், கருத்துரைகள் அனைத்தும் இந்த நிலைக்கு முற்றிலும் நேர்மாறானதாக இருந்து வருவதுடன் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகளாகவும் அமைந்துள்ளது.
இவர்கள் அனைவரும் 'மனித மிருகம்' மகிந்த ராஜபக்சவின் தோல்வியையும் 'குள்ளநரி' ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியையும் தமிழர்களின் வெற்றியாக காட்ட முற்படுகிறார்கள்.
மகிந்த ராஜபக்சவின் தோல்வி மூலம் 'இனவாதம்' தோற்கடிக்கப்பட்டு, 'புலிப்பூச்சாண்டி' முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வினைக் காணும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இவர்கள் முன்வைக்கும் மேற்கண்ட வாதங்கள் குறித்து பார்ப்பது அவசியமாகும்.
இனவாதம்' தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் 'புலிப்பூச்சாண்டி' முடிவு கட்டப்பட்டுள்ளதாக காட்டுவதன் மூலம் ஒன்றுபட்ட நாட்டிற்குள் சிங்கள மக்களுடன் இணைந்த வாழ்வை இவர்கள் வலியுறுத்த முற்படுகிறார்கள் என்றே தோன்றுகின்றது.
நல்லாட்சியை விரும்புவது தமிழர்களே அன்றி சிங்களவர்கள் கிடையாது!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு மைத்திரிபால சிறிசேன தமிழர்களது பங்கேற்பின் மூலம் வெற்றிபெற முடிந்ததோ அவ்வாறே தற்போது நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழர்களது பங்கேற்புடனே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக முடிந்துள்ளது. சிங்கள மக்கள் சரிபாதியாக பிளவுபட்டு நிற்பதை இந்தத் தேர்தலிலும் பார்க்க முடிகின்றது.
'மனித மிருகம்' மகிந்த ராஜபக்சவிற்கான ஆதரவு நிலையானது சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை. ரணிலின் வெற்றியானது விளிம்புநிலை வெற்றியாகும். இந்த விளிம்பு நிலை வெற்றிகூட தமிழர்களாலே சாத்தியமாகியுள்ளது.
ஒன்றரை லட்சம் தமிழர்களின் இனப்படுகொலை, மௌனிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழர்களது ஆயுதப் போரட்டத்தின் வெளிப்பாடற்ற புறச்சூழலில் 2010ல் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட (60,15,932)  வாக்குகளைப் பெற்ற 'மனித மிருகம்' ராஜபக்ச கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருந்த போதிலும் 57,68,090 சிங்களவர்கள் வாக்களித்திருந்தார்கள்.
இதேபோன்று 2010 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதியாகிய ராஜபக்ச தலைமையில் போட்டியிட்டு 48,46,388 (60:33%) வாக்குகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் 144 ஆசனங்களை தன்வசமாக்கியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த ஓகஸ்ட்-17ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 47,32,689 வாக்குகளின் அடிப்படையில் 95 ஆசனங்களை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு தேர்தல் முடிவுகளை ஒப்புநோக்கினால் சிங்கள மக்களின் தெரிவென்பது இந்த கால இடைவெளியில் பெரிய நிலைமாற்றம் எதனையும் கொண்டிக்கவில்லை என்பதை உணரமுடியும். இந்நிலையில் 'குள்ளநரி' ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது 2010 பாராளுமன்றத் தேர்தலில் 23,57,057 வாக்குகளின் அடிப்படையில் 51 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில் நல்லாட்சி கோசம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதரவு என்ற பின்புலத்தில் ரணில்-மைத்திரி-சந்திரிகா கூட்டிணைவில் இம்முறை தேர்தலை எதிர்கொண்டு 50,98,927 வாக்குகளைப் பெற்று 106 ஆசனங்களை வென்றுள்ளது.
மைத்திரியின் வெளிப்படையான எதிர்ப்பு நிலை, கடும்போக்கு சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் விலகல், ஆட்சியதிகாரத்தின் தொடர் நெருக்கடிகள், ராஜபக்ச குடும்பத்தின் மீதான ஊழல், நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் என அனைத்து வழிகளிலும் கடுமையான சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் வெறும் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்திலான கௌரவ தோல்வியையே மகிந்த சந்தித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே இம்முறையும் தமிழர்களே மகிந்தவின் தோல்விக்கு காரணமாக விளங்கியுள்ளார்கள்.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இணைத்துப் பெறப்பட்ட வெற்றியாகவே ஐ.தேசிய முன்னணியின் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்தக் கட்சிகளின் பங்கேற்புடன் பெறப்பட்ட அதிகப்படியான வாக்குகளே இம்முறையும் மகிந்தவை தோற்கடித்துள்ளது.
உயிர்த்தெழும் நிலையில் உறங்கவைக்கப்பட்டிருக்கும் 'இனவாதப் பூதம்'!
புலிகளின் மீழ் எழுச்சியை முன்னிறுத்தியதான இனவாதத்தை முன்வைத்து மீண்டும் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற மகிந்தவை சிங்கள மக்கள் தூக்கியெறிந்து விட்டதாக கூறுவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு சிங்கள மக்கள் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக நம்பவைக்க முற்படுகின்றார்கள்.
தேசிய பாதுகாப்பு, தேசப்பற்று என்ற முழக்கமே இரண்டு தரப்பாலும் வழக்கம் போன்று இம்முறையும் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அடிப்படை இனவாத கருத்தாக்கமே சிங்கள பௌத்த மக்களின் வாக்களிப்பில் பிரதிபலித்துள்ளது. இதனை ரணில்-மைத்திரி உள்ளிட்டவர்கள் உணர்ந்திருப்பதாகவே தோன்றுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளின் கூட்டாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ள புறநிலை இயல்பிற்கேற்ப 16 ஆசனங்களை பெற்றுள்ளதன் மூலம் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய எதிர்க்கட்சிப் பதவியானது பெரும் இழுபறிக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ளமைக்கு இன்னும் உயிர்ப்போடு இருக்கும் 'இனவாதமே' காரணமாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற பின்னர் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் சென்ற மகிந்த தமிழர்களே தன்னை தோற்கடித்ததாக கூறிவந்த நிலையில் இன்று அமைதியாக இருப்பதற்கு அவர்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் உடன்பாடே காரணம் ஆகும்.
நல்லாட்சி கோசத்துடன், சனவரி-08 மற்றும் ஓகஸ்ட்-17 ல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆட்சி மாற்றமானது தமிழர்களாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது. நிலமை இவ்வாறு இருக்கையில் உண்மையை மூடிமறைத்து சிங்கள மக்கள் மத்தியில் நீடித்து வந்த இனவாதப்போக்கு தணிந்துவிட்டதாக பரப்புரை மேற்கொள்பவர்களது நோக்கம் நிச்சயமாக அமெரிக்கா-இந்தியா - ரணில்-மைத்திரி - சம்பந்தன்-சுமந்திரன் ஆகிய தரப்பினரைக் காப்பாற்றும் முயற்சியாகவே இருக்கும்.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவனது குடும்பத்தவர்களுக்கு எதிராக மைத்திரி-ரணில் ஆட்சி சிறு துரும்பை அசைத்தால்கூட சர்வவல்லமையோடு உடனடியாக உயிர்த்தெழ வைக்கப்படும் அபாயநிலையிலேயே 'இனவாதப் பூதம்' உறங்கவைக்கப்பட்டுள்ளது. அதனை காட்டிப் பயமுறுத்தியே இனப்படுகொலை குற்றவாளிகளை தப்பவைப்பதுடன் உரிமை கோரிநிற்கும் எம்மை சலுகைகளுடன் திருப்திப்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றது.
'தற்போது, வெற்றியாளர்கள், தோல்வியடைந்தவர்கள் என பிரித்துப் பார்த்தலாகாது. ஒரு தாயின் பிள்ளைகளைப் போன்று நாங்கள் அனைவரும் புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்குவதற்காக ஒன்றுபட வேண்டும். புதிய யுகத்தின் சவால்களுக்கு முகம்கொடுத்து எங்கள் தேசத்தை முன்னேற்றுவதற்கு ஒருமனதுடன் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு எங்களுடன் கைகோர்க்குமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.' இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தது மகிந்த தரப்பிற்கே அன்றி தமிழர் தரப்பிற்கு அல்ல என்பதை ஆட்சியமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்திலெடுக்கப்படாமை உணர்த்துகின்றது.
அதேவேளை, எந்தவொரு கட்டத்திலும் நாட்டைத் துண்டாடவோ, பிரிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை என்று உறுதியளிக்கும் சத்தியக் கடதாசியொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சனாதிபதியிடம் ஒப்படைத்த பின்னரே பிரதமராக பதிவியேற்றிருக்கின்றார். சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அச்சத்தினைப் போக்குவதற்காக இந்த ஏற்பாடு என்று கூறப்படுவதன் மூலம் இந்த ஆட்சியிலும் தமிழர்களது அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பலியிடப்படும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்கள்.
நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற வார்த்தைகளுக்குள் தமிழர்களது அபிலாசைகள் குழிதோண்டி புதைக்க முயற்சி!
பொருளாதார அபிவிருத்தி, ஊழலை ஒழித்தல், கல்வியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துதல், பெண்கள் சிறார்கள் உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தேசிய அரசாங்கம்(?) தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைத் தீவு கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருக்கும் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணமான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற வார்த்தை சோடனைகளுக்குள் தமிழர்களது அரசியல் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைத்துவிடுவதன் மூலம் சிங்கள தேசம் தன்மீதான இன அழிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதையே முதன்மையான குறிக்கோளாக வகுத்துள்ளது. மைத்திரி-ரணில்-மகிந்த-சந்திரிக்கா கூட்டிணைவு ஆட்சி தனது செயற்பாடுகளை இதனடிப்படையிலேதான் திட்டமிட்டு செயல்படுத்திவருகின்றது.
'என்னை ஜனாதிபதி கதிரையில் அமரவைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய ஒத்துழைப்பை நான் என்றும் மறக்கமாட்டேன். என்னுடைய வெற்றிக்காக பலர் உயிர்களை தியாகம் செய்தனர். ஆகவே எந்தக் காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் இழைக்க மாட்டேன். என்மீது உறுதியான நம்பிக்கை வைத்து செயற்படுங்கள்.' இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் 69 நிறைவாண்டு விழாவில் உரையாற்றியிருந்தார் மைத்திரி பாலசிறிசேன. இதே மைத்திரியின் வெற்றிக்கு தமிழர்களது வாக்களிப்பே காரணமாக அமைந்திருந்தது என்பது உலகறிந்த உண்மையாகும். நிலமை இவ்வாறு இருக்கையில் மைத்திரி எந்தவொரு தருணத்திலும் தன்னை வெற்றிபெறவைத்த தமிழர்களிடத்தே இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கவில்லை. ராசபக்சேவின் கொலைகார இராணுவத்தின் முற்றுகைக்குள் இருந்தவாறு தமது உயிரைப் பணயம் வைத்து மைத்திரிக்கு வாக்களித்த தமிழர்களது தியாகத்தை வசதியாக மறைத்துவிட்டு மைத்திரியும் கயிருதிரித்துள்ளார்.
தமிழினப் பலியெடுப்பும், பறிக்கப்படும் நீதியும்!
இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதாகட்டும், சிங்கள மொழியே ஆட்சிமொழியென அறிவிக்கப்பட்டதாகட்டும், பௌத்த சிங்களர் ஒருவரே நாட்டை ஆளும்வகையில் பௌத்த மதமே ஆட்சி மதம், சிங்கள மொழியே ஆட்சி மொழி என்று ஒற்றையாட்சிக்கு அடித்தளமிட்டதாகட்டும் அனைத்துமே பௌத்த சிங்களப் பேரினவாதத்தை குதூகலப்படுத்த எடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளாகும்.
தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் மூலமாக பௌத்த சிங்களப் பேரினவாதத்தை குதூகலப்படுதிய சிங்கள அரசுகள் நாளடைவில் தமிழிர்களைப் படுகொலை செய்து அவர்களது இரத்தத்தில் குளிப்பாட்டவும் செய்தார்கள். இறுதியில் மாபெரும் இன அழிப்புடன் முள்ளிவாய்க்காலில் ஊழித்தாண்டவம் ஆடியவர்கள் தமக்குள் கயிறுழுப்பு நடத்தி ஓய்ந்துபோய் தம்மைத்தாமே காப்பாறும் நோக்கில், இன்று ஓரணியில் திரண்டுள்ளார்கள். இவ்வாறு தமிழர்களின் இரத்தக்கறை படிந்தவர்களே இன்றைய நல்லாட்சி அரசின் தலைமைப்பீடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
உலகப் பிராந்திய வல்லரசு நாடுகளின் பங்கேற்போடு சிங்கள இனவெறி அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலையின் நீட்சியை தடுத்து நிறுத்துவதுடன் மீதமிருக்கும் தமிழர்களது உயிரைக் காப்பாற்றும் ஒரே நோக்கில், முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட தமிழர்களது விடுதலைப் போராட்டமானது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களது தொடர்பங்கேற்பின் மூலமாக உலகப்பெருவெளியில் 'நீதிக்கான போராட்டமாக' உயிர்பெற்று நிற்கின்றது. முள்ளிவாய்காலோடு தமிழர்கள் மூச்சடங்கிவிடுவார்கள் என்று நினைத்திருந்த சக்திகளுக்கு, ஊனை உருக்கி உணர்வுகலந்து புலம்பெயர் ஈழத்தமிழ் இளையோரால் எழுப்பப்பட்டுவரும் 'We want justice' என்ற முழக்கம் தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்கமுடியாதளவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.
இலங்கையில் அதிகரித்து வந்த சீனாவின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் முதன்மையானதாக இருந்தாலும், உலகளாவிய மனித உரிமை செயற்பாட்டாளர்களை உள்வாங்கியதான புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டமே அமெரிக்காவை போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மகிந்த ராசபக்சேவிற்கு நெருக்கடிகொடுக்கும் நிலைக்கு தள்ளியிருந்தது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத்தரும் இடத்தில் இருப்பவர்களும் அந்தக் குற்றத்தில் நேரடிப்பங்காளர்களாக இருப்பதே எமக்கான நீதி மறுக்கப்பட்டுவருவதற்கு காரணமாகும்.
இந்தப் பின்னணியில்தான் அமெரிக்கா மற்றும் இந்தியா, சிங்கள தேசத்தில் தமக்கு ஒத்திசைவான தலைமைகளை ஆட்சி, அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளது. இனப்படுகொலை, சர்வதேச சுயாதீன விசாரணை என்ற எமது கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்வதற்காகவே நல்லிணக்கம், நல்லாட்சி என்ற கோசத்துடன் மைத்திரி-ரணில் ஆட்சி ஊக்குவிக்கப்படுகின்றது.
இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்களது நேரடிப்பங்கேற்பின்றி ஒரு முழுமைபெறாத விசாரணை அறிக்கையாக இருந்தாலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாத அமர்வில் சமர்பிக்கப்பட இருந்த விசாரணை அறிக்கையானது, நீதிக்கான முயற்சிகளின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்றே ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற பெயரில், கடந்த சனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்ட கையோடு அந்த நல்லாட்சியை பலப்படுத்த பாராளுமன்றத் தேர்தல்வரை விசாரணை அறிக்கையை ஒருதலைப்பட்சமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தள்ளிவைத்திருந்தது. மைத்திரியின் நல்லாட்சியில் பங்குதாரராக விளங்கும் ரணில் தலைமையில் பாராளுமன்றமும் அமைந்தாகிவிட்டது. இருந்தும் சிங்களத்தரப்பை திருப்திப்படுத்த தமிழர்களுக்கான நீதியை பலிகொடுக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றன.
சிங்கள பௌத்த பேரினவாதத்தை குதூகலப்படுத்த, சிங்கள அட்சியாளர்கள் தமிழர்களைப் பலியிட்டார்கள். அதே சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தி தமது பிராந்திய நலன்களை உறுதிப்படுத்த, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமிழர்களுக்கான நீதியை பலியிட முற்படுகிறார்கள். தமிழர்களைப் பலியிடவும், தமிழர்களுக்கான நீதியைப் பலியிடவும் அவர்களுக்கு அவர்கள் சார்ந்த காரணங்களே முதன்மையானதாக இருக்கின்ற போது, அவர்களுக்கு துணையாக தமிழர் தரப்பில் இருந்து சம்பந்தன்-சுமந்திரன்கள் செயற்படுவது அவர்களும் இவர்களும் ஒன்றானவர்கள் என்பதையே எமக்கு உணர்த்துகின்றது.
கலங்கரை விளக்காய் விடுதலைக்கு வழிகாட்டும் முதல்வர் விக்னேஸ்வரன்!
இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில், வட மாகாண மக்களது பேராதரவுடன் முதலமைச்சராக செயல்பட்டுவரும் நீதியரசர் விக்னேசுவரன் அவர்கள் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் வேணவாவினை உள்வாங்கியதான நிலையில் நின்று உள்ளக, அயலக, அனைத்துலக நெருக்கடிகளையும் கடந்து, உண்மைகளைக் கண்டறிவதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தியேயாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். கூட்டமைப்பின் தலைமைகள் சிங்கள, இந்திய, அமெரிக்க அரசுகளின் நலன்சார்ந்து செயற்பட்டு வருகையில், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மட்டுமே எம் இனத்தின் நலன்சார்ந்து சிந்தித்து செயற்பட்டுவருகின்றார்.
முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், ஏமாற்றங்களையும், தோல்விகளையும், துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே சந்தித்துவந்த கடந்த ஆறு ஆண்டுகாலத்தில் ஒற்றை ஆறுதலாக மட்டும் இல்லாமல் பெரும் நம்பிக்கையாகவும், விடுதலைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காகவும் இருப்பது எங்கள் இனத்தின் முதல்வர் விக்னேஸ்வரன் மட்டுமே!
இனப்படுகொலைக்கான பயணத்தில் முத்திரைபதித்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணை அறிக்கை!
ஆறு மாத தாமதத்திற்குப் பின்னர், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தற்போது கொண்டுவரப்பட்ட விசாரணை அறிக்கையானது, இனப்படுகொலை என்பதை வலியுறுத்தத் தவறியிருந்தாலும் நடைபெற்ற அனைத்துக் குற்றங்களுக்கும் இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளதன் மூலம் இதுவரைகாலமும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற குரூரமான மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள், அதாவது பாகுபாடற்ற எறிகணைத்தாக்குதல், நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமலாக்கப்படல், மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் மற்றும் வேறு பாரதூரமான குற்றங்களை இந்த விசாரணை அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார். இவ்வறிக்கையின் முக்கிய விடையங்களாவன...
• சட்டத்திற்கு புறம்பான கொலைகளுடன் சிறிலங்கா பாதுகாப்புப் படையினருடன் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் ஈடுபட்டுள்ளமை...
• இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தோர், காணாமல் போனோர், கைது செய்யப்பட்டு காணாமல் போனோர், தடுத்துவைக்கப்பட்டோர் என்போர் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்...
• பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்முறைகளில் பெண்கள் மாத்திரமின்றி ஆண்களும் அடங்கியுள்ளதாகவும், இப்பாலியல் வன்முறை செயற்பாடானது, சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்டு பாவிக்கப்பட்டுள்ளது...
• காணாமலாக்கப்படுதல் மூலம் பல்லாயிரக்கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் காணாமலாக்கப்படல் என்பது பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரந்த மற்றும் திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது...
• வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள், கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் குரூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்...
• யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்றமை சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு அமையவில்லை...
• அரசாங்கம் அறிவித்த யுத்த சூனிய பிரதேசத்தில் இருந்த மருத்துவமனை, மனிதாபிமான உதவி வழங்கும் நிலையங்கள் அமைந்திருந்த இடங்களின் மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன...
• பொது உடமைகள் மற்றும் யுத்தத்தில் நேரடியாகப் பங்குபற்றாத மக்கள் மீதும் நேரடித்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன...
• வடமாகாணத்தில் வன்னி பிரதேசத்திற்கு உணவு உதவி மற்றும் மருத்துவப் பொருட்கள் சென்றடைவதற்கு தடைவிதித்தமையானது பொதுமக்களை பட்டினிபோடுவதை ஒரு யுத்தமுறைமையாக பிரயோகிக்கப்பட்டுள்ளது...
• தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் போராளிகளை பொது மக்களில் இருந்து வேறுபடுத்தி பிரிப்பதற்காக பிரயோகிக்கப்பட்ட வழிமுறைகள் சர்வதேச விதிமுறைகளை மீறியது மட்டுமல்லாது, அம்மக்களின் துஸ்பிரயோகங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தன. ஏறத்தாழ மூன்று லட்சம் இடம்பெயர்ந்தோரின் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்கு மேலாக பறிக்கப்பட்டது...
• மேலும், இடம்பெயர்ந்தோர் தமிழர்கள் என்பதால், அவர்கள் சந்தேகநபர்களாக நடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள்...
இந்த நடைமுறையானது, தமிழ் மக்கள் பாரபட்சத்துடன் நடத்தப்பட்டார்கள் என்றும், மனிதநேயத்திற்கு எதிரான குற்றமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்றும் கருதப்பட இடமளிக்கின்றது.
• இவ்வறிக்கை பல வருடங்களாக நடைபெற்ற உண்மைகளை மறுத்தல், மூடி மறைத்தல், உடனடி விசாரணைகளை நடத்தாமல் விடல், விசாரணைகளை இடைநிறுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், நீதிக்காக அழுத்தங்கள் கொடுத்து செயற்படுவோருக்கும் எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மற்றும் இழைக்கப்பட்ட மீறல்களை ஆவணப்படுத்துகின்றது.
• மேலும், இவ்வறிக்கை பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்ச்சியாகக் கண்ட தோல்வியின் காரணத்தால் பாதிக்கப்பட்டோர் கோபம், ஐயுறவு மற்றும் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள். குற்றங்களுக்கும், உரிமைமீறல்களுக்கும் காரணமான கட்டமைப்புகள் எவ்வித சீர்திருத்தங்களுக்கும் உட்படுத்தப்படாது அதே நிலையில் காணப்படுகின்றன. குற்றங்கள் இராணுவத்தினராலும், பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்படும் போது அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க இயலாமல் இருப்பது கட்டமைப்புகளின் பலவீனத்தை சுட்டிக்காட்டுகின்றது.
• பொறுப்புக்கூறலை ஒரு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் கையாள்வதாக இப்புதிய அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி பாரட்டத்தக்கது. ஆனாலும், தூரதிஸ்டவசமான உண்மை என்னவெனில், இலங்கையின் குற்றவியல் நீதிப் பொறிமுறை இதை செயற்படுத்துவதற்கு திறனற்றதாக உள்ளது.
முதன்மையான விடயம் என்னவெனில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சியங்களுக்கும் பாதுகாப்பு வழங்க, நம்பகத்தன்மையுடைய பாதுகாப்புப் பொறிமுறை இன்றுவரை நிறுவப்படவில்லை. இரண்டாவது, இலங்கையின் உள்நாட்டு சட்டக்கட்டமைப்பானது பாரதூரமான சர்வதேச குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொள்திறன் இல்லாதது. மூன்றாவது சவால் என்னவெனில், பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த அவசரகாலச்சட்டம், யுத்தம் மற்றும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பியமை ஆகியவற்றால் இலங்கையின் பச்துகாப்புத் துறையும், நீதித்துறையும் சிதைவடைந்துள்ளன.
• இலங்கை வரலாற்றில் அரசாங்கங்கள் காணாமலாக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைப்போம் என உறுதிமொழி கொடுத்திருந்தாலும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமை, மற்றும் இம்மாதிரியான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்த கட்டமைப்புக்களில் உள்ள பிரச்சினைகளை வேரோடு அகற்றாமையினால், வெள்ளை வான்கள் தேவையான தருணத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
• கடந்த முப்பதாண்டு காலமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவும், இம்மீறல்கள் மீண்டும் நடைபெறாது என்று உத்தரவாதமளிப்பதற்கும் ஒரு முழுமையான இடைக்கால நீதிக் கொள்கையை உருவாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு, தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், அத்துமீறல்கள் குறித்தும், அவற்றிற்கான நீதியினை வழங்குவதற்கு தகுதியற்றதான சட்டங்களையும், அதனடிப்படையில் செயற்படுத்தப்பட்டுவரும் நீதித்துறையின் கையாலாகாத்தனத்தினையும் வெளிப்படுத்தியிருக்கும் இவ்வறிக்கை இலங்கைத் தீவில் நீடித்துவரும் இனச்சிக்கலுக்கான அடிப்படை விடையத்தையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
அதாவது, பல வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மனித உரிமை மீறல்களினாலும், குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெறாது தப்பிப்பதும் சாதாரண மயமாக்கப்பட்டமையாலும், இருதரப்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் மனவடுக்கள் சீழ் கூட்டி ஆழமாக பதியப்பட்டுள்ளன. அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்து இக்காயங்களை ஆற்றாவிட்டால், இவர்களின் தொடரும் வேதனையானது சமூகங்களுக்கிடையில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி, நல்லிணக்கத்திற்கு ஒரு தடையாக அமைவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் புதிய முரண்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
இவ்வாறு, மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளதைத்தானே தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக சுட்டிக்காடிவந்திருந்தார். முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களும் இவ்விடயங்களைத்தானே தனது தீர்மானத்தில் உறுதிபடத்தெரிவித்துள்ளார். ஆயுதப்போராட்டம் தோற்றம்பெற்றமைக்கும், பிரிந்து செல்வதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற கையறு நிலைக்கு தமிழர்களைத் தள்ளியதற்கும் இதுதானே காரணம்...?
விசாரணை முற்றுப்பெறும்போது இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் இருக்கும்!
மூவாயிரம் வாக்குமூலங்கள், சமர்ப்பிப்புக்கள் மற்றும் வெளியிடப்படாத அறிக்கைகளின் அடிப்படையில் பெறப்பட்ட, நேரடிச் சாட்சியங்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் வேறு சாட்சியங்களோடு நடத்தப்பட்ட நேர்காணல்கள், இராணுவ மற்றும் தடயவியல் நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள், செய்மதிப் புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து தயாரிக்கபட்டுள்ள இவ் விசாரணை அறிக்கையின் வாயிலாகவே இவ்வளவு விடையங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். தொண்ணூறாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரம் சிறுவர் சிறுமியர் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்காணவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளார்கள். கைது, சரணடைதல், கடத்தல் மூலம் பல்லாயிரக்கணக்காணவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். எழுபதாயிரத்திற்கு அதிகமான ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள் உயர்பாதுகாப்பு வலையம், இராணுவத் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு உரிமையாளர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
ஆயிரக்கணக்கான வழிபாட்டுத்தளங்கள் இடித்தழிக்கப்பட்டுள்ளன. கல்விசெயற்பாடு நடைபெற வேண்டிய பாடசாலைகள் இராணுவ முகாம்களாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புப் போரின் சுவடுகள் ஈழ மண்ணில், மலைபோல் குவிந்திருக்கின்றன. இவை அனைத்தும் முறையாக விசாரிக்கப்படுமானால் நடந்தது இனப்படுகொலை என்பது உறுதியாவதுடன், நீடித்து நிலைத்த சமாதான சகவாழ்வு அமைய, இலங்கைத் தீவானது இரு தேசங்களாகப் பிரிவது தன்னியல்பாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆகவே சர்வதேச விசாரணை என்ற இலக்கு நோக்கியதாக எமது போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
இவை ஒருபக்கமிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களை சிலர் முதன்மைப்படுத்தி வருகின்றார்கள். அது குறித்து நாம் கருத்திலெடுக்கபட வேண்டியதில்லை என்பதே உண்மையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐ.நா.விசாரணை அறிக்கை சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்களை காலாவதியாக்கும் காரணங்கள் அந்த அறிக்கையிலேயே இருக்கிறது. அதனால் அதுகுறித்து நாம் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை.
நீதிமன்றமாகும் குற்றவாளிகளின் கூடாரம்!
மகிந்த ராஜபக்சவின் ஆட்சி இன்றிருந்திருந்தால் விசாரணை அறிக்க இன்னும் கடுமையானதாக இருந்திருக்கும் என்பதுடன் நாடு மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியிருக்கும். தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையானது ஆயிரம் மடங்கு பலம் குறைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்டு நாடு காப்பாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மைத்திரிபால சிறிசேனா கூறுவதில் இருந்து ஒரு விடையம் தெளிவாகிறது.
அமெரிக்கா-இந்தியா-மைத்திரி-ரணில் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் அறிக்கை பலவீனமாக்கப்பட்டுள்ளது. இவ்விடையத்தின் அடிப்படையிலேயே 'மனித மிருகம்' மகிந்த ராசபக்சே அமைதிப்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெள்ளத்தெளிவு. அதனால்தான், செனீவா அமர்வு நடைபெற்றுவரும் சமகாலத்திலேயே மகிந்தவை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியிருக்கின்றோம் என்று ரணில், மைத்திரி, மங்கள சமரவீர ஆகியோரால், வெளிப்படையாகவே பேசமுடிகின்றது.
2002 முதல் 2011 வரையான கால எல்லைக்குள் நடைபெற்ற போர்குற்றங்கள் குறித்தே இவ்விசாரணை அறிக்கை குறிப்பிடுகின்றது. இக்காலப்பகுதியில் நடைபெற்ற அத்தனை மீறல்களுக்கும் ராசபக்சே ஒருவர்தான் பொறுப்பு என்பதான தோற்றப்பாட்டை உருவாக்க இவர்கள் முயற்சிக்கின்றார்கள். இன்றைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் போரின் இறுதி நாட்களை நேரடியாக வழிநடத்தியவர். அந்த நாட்களில்தான் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கும் போர் விதிமுறைகளுக்கும் புறம்பாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தக் காலப்பகுதியில் பிரதமராக இருந்துள்ளார். இந்த நல்லாட்சி(?) கூட்டணியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சந்திரிக்கா 2005 இறுதிவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்ததுடன் முப்படைகளின் பிரதான அமைச்சராகவும் இருந்துள்ளார். இதே மைத்திரிதான் இக்காலப்பகுதியில் யுத்தத்தை தலமை தாங்கி நடத்திய சரத்பொன்சேகாவுக்கு அண்மையில் 'பீல்ட்டு மார்ஷல்' பதவிநிலை கொடுத்திருந்தார்.
இவ்விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைத்துக் குற்றங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட இவர்களது ஆட்சியின் கீழ், போரை வழிநடத்திய அமெரிக்கா, இந்தியாவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் கலப்பு விசாரணைப் பொறிமுறையில் மருந்தளவிற்கும் நீதியை எதிர்பார்க்க முடியாது.
இந்த விசாரணை அறிக்கை ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த கூட்டத்தொடரிலேயே சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை கொண்டுவரவேண்டுமாயின் நாம் பெரும் பலம்கொண்டு ஓயாது போரடியாக வேண்டும். தாயகத்தில் பல்வேறு தளங்களில் இக்கோரிக்கையினை வலியுறுத்தும் போராட்டங்கள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன.
இதே இலக்கு நோக்கியதாக தொப்புள்கொடி உறவுகளும் பல்வேறு வகையில் போரட்டங்களை முன்னெடுத்துவந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன் இந்தியப் பிரதமருக்கு அதுகுறித்த அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் கட்சி, அரசியல், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் இந்திய மத்திய அரசையும் இந்தக் கோரிக்கையை நோக்கிய பாதையில் கொண்டுவர முடியும்.
இந்த இரண்டு தளங்களையும்விட புலம்பெயர் தளத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களே அதிமுக்கியமாகும். எமக்கான நீதியைத் தடுக்கும் அனைத்துலக சமூகத்தின் வாசல்களை சென்றடையவும், கதவுகளைத் தட்டி நீதி கேட்கவும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய எம்மால்தான் முடியும். எமக்குள் இருக்கும் பிரிவுகள், பேதங்கள், வேற்றுமைகள், தயக்கங்கள், வெறுப்பு, விருப்புகள் கடந்து அணிதிரள்வோம்
ஜெனீவா முன்றலில். சாவுக்கு தன்னையே இரையாகக் கொடுத்த 'தியாக தீபம்' திலீபன் அண்ணாவின் தியாக நாட்கள் நினைவுகொள்ளப்படும் இத்தருணத்தில் செனீவாவில் ஒன்று கூடுவோம்! உறவுகளே அலைகடலெனத் திரண்டு வாருங்கள்! உள்ளிருக்கும் நரிகளின் ஊளைச் சத்தத்தை விட பல்லாயிரக்கணக்கில் திரழும் புலிகளின் உறுமல் ஓசை செனிவா திடலை அதிரச்செய்யட்டும்!!
மூத்த அரசியல் ஆய்வாளர் ச.ச.முத்து அண்ணன் கூறியது போல, போராடிக் கொண்டிருந்தால்தான் உலகின் கவனத்தில் இருப்போம். ஓய்ந்து போய்விட்டால் எம்மீது கல்லறை நட்டு அழிந்த தேசிய இனமென்று தோற்றம் மறைவு எழுதிவிடும் வரலாறு. எனவே மூச்சு விடுவதற்காக போராடுவோம். போராடுவதற்காக மூச்சு விடுவோம்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'

ம.செந்தமிழ். (19-09-2015)
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila