வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்து உள்ளக விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் ஆதரவு தெரிவித்ததன் மூலம் நாம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் அல் ஹுசேன் “சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பார். எமது படையினரையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்பட அரசியல் தலைவர்கள் சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றங்களில் நிறுத்துவதற்கு ஆணையிடுவார் ” என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். இதனைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி அரசு இயந்திரத்தை முடக்கவும், நெருக்கடிகளை ஏற்படுத்தவும் முடியும் என்றும் கணக்குப் போட்டார்கள். இறுதியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கனவு தப்புக்கணக்காகிவிட்டது.
இலங்கை வந்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நாயகம் சர்வதேச பங்களிப்பு உள்ளக விசாரணைக்கு தேவையா? என்பதை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என அறிவித்தார். சர்வதேச விசாரணையோ, யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தொடர்பில் எதுவிதமான கருத்துக்களையும் அவர் வெ ளியிடவில்லை.
அத்துடன் அவரது வட மாகாண விஜயத்தின் போது விடுதலை புலி சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை நிராகரித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுதலை புலி சந்தேக நபர்களை விடுதலை செய்வது என்பது இலங்கையின் நீதித்துறையுடன் தொடர்பு பட்ட விடயமாகும். எனவே இலங்கையின் சட்டப் பிரகாரம் இவ் விடயங்கள் விசாரிக்கப்பட்டே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இவ்வாறு இலங்கை அரசுக்கு சார்புத் தன்மையாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. எனவே அரசை நெருக்கடியில் தள்ளிவிடும் அனைத்தும் எதிர்க்கட்சியினரின் முயற்சிகள் அனைத்தும தோல்வி கண்டுவிட்டன. இன்று நாடு 1948 இன் பின்னர் சுதந்திரமான சுயாதீனமான நாடாக மாறியுள்ளது. வெளிநாடுகளின் தலையீடுகள் இல்லாமல் எமது இறைமையைப் பாதுகாத்துக் கொண்டு தீர்மானம் எடுக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரங்கள் இன்று எடுபடவில்லை. உண்மைகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் ஜனநாயக நடவடிக்கை களுக்கு சர்வதேசம் இன்று முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. இந்த அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டையும், படை யினரையும், மஹிந்த ராஜபக் ஷ உட்பட அரசியல் தலைவர்களையும் பாதுகாத்துள்ளது என்றார்.


