வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே நேற்று பதவியேற்றுள்ள நிலையில் இன்று இந்தப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளன.
முதலமைச்சருடன், வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயவே இந்த சிறப்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான யோசனைகளையும், எந்த துறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான யோசனைகளையும் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழு, சிறிலங்கா பிரதமரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தி தொடர்பாக வடக்கு மாகாணத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள அபி்விருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும், சிறிலங்காவின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.