ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின்
நினைவுகளுடன் பேசுதல் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது!
இறுதிப்போரின் போது மறைந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுகளுடன் பேசுதல் எனும் தொனிப்பொருளிலான ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்றது. இது தொடர்பாக தமிழ்கிங்டொத்தின் பிராந்திய செய்தியாளர் தரும் மேலதிக தகவல்கள்.
மூத்த படைப்பாளரும் எழு கலை இலக்கியப்பேரவையின் அமைப்பாளருமான இணுவையூர் சிதம்பரத்திருச்செந்திநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சத்தியமூர்த்தி அவர்களின் திருவுருவப்படுத்துக்கு அவர்களுடைய அம்மம்மா வெற்றிவேல் தங்கரத்தினம் அவர்கள் மாலை அணிவித்து சுடரேற்றி நிகழ்வினைத் தொடங்கிவைத்தார்.
அகவணக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தொடக்க உரையினை எழு கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் மயூரரூபன் ஆற்றினார். அவர் தனது உரையில் சத்தியமூர்த்தியின் இலக்கிய மற்றும் ஊடக வருகை தொடர்பிலும் நிகழ்வு தொடர்பிலுமான அறிமுகத்தினை வெளிப்படுத்தி உரையாற்றினார்.
நிகழ்வின் தலைவர் உரையாற்றும்போது,
சத்தியமூர்த்தி அவர்களின் பிரவேசம் தொடக்கம் இறுதியில் அவர் பிரிந்த காலம்வரையிலான 19ஆண்டுகள் இலக்கிய, மற்றும் ஊடகத் துறைகளின் செயற்பாடுகள் மற்றும் ஆளுமை தொடர்பில் உரையாற்றினார். நிகழ்வின் நினைவுரையாற்ற வந்திருந்த வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜயசுந்தரம்,
சிறுவயது முதல் யாழ்ப்பாணம் இடப்பெயர்வு வரையிலான சத்தியமூர்த்தியின் செயற்பாடுகள் தொடர்பில் உரையாற்றினார். நினைவுரையாற்றிய யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள், இறுதிப்போரின் போது வன்னி சந்தித்த நெருக்கடிகள் அவலங்கள் தொடர்பிலும் ஊடகங்கள் தொடர்பிலும் உரையாற்றியதுடன் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் ஊடகச்செயற்பாடு தொடர்பிலும் உரையாற்றினார்.
அனுபவ உரைகள் வரிசையில்,
கவிஞர் வேலணையூர் சுரேஸ்,
சத்தியமூர்த்தி அவர்களின் பள்ளிக்காலம் முதல் இறுதிக்காலம் வரையிலான தங்களுடைய நட்புத் தொடர்பிலும் சத்தியமூர்த்தி அவர்களின் ஆளுமையான செயற்பாடுகள் தொடர்பிலும் உரையாற்றினார்.
தொடர்ந்து இளங்கீரன் ,
சமாதான காலத்திற்கு முன்பாக சமாதான காலத்தில் அதற்கு பின்னான காலத்தில் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் சத்தியமூர்த்தி அவர்களின் ஊடகப்பணி தொடர்பிலும் உரையாற்றப்பட்டது.
எழு கலை இலக்கியப் பேரவையின் தலைவர் கை.சரவணன்,
சத்தியமூர்த்தியின் பன்முக ஆளுமை, சமூக அக்கறை உட்பட்ட விடயங்கள் தொடர்பில் உரையாற்றினார். இறுதியாக நன்றியுரையாற்றிய எழு கலை இலக்கியப்பேரவையின் பொருளாளர் நிஷாகரன்,
சத்தியமூர்த்தியால் உருவாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் கற்கை நெறிகள் தொடர்பிலும் உரையாற்றியதுடன், சத்தியமூர்த்தி தொடர்பில் எழு கலை இலக்கியப் பேரவை தொகுப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதால் அவருடைய ஆக்கங்களை வைத்திருப்போர் தந்துதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மூத்த படைப்பாளர்கள், படைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.