தசரதச் சக்கரவர்த்தியை விட அவன் மகன் இராமன் உத்தமன்


தசரத சக்கரவர்த்திக்கு உத்தியோகபூர்வமாக மூன்று மனைவியர். முதல் மனைவி கோசலை. இரண்டாவது மனைவி கையேயி. மூன்றாவது சுமத்திரை. இதுதவிர, மன்னர்களுக்கு இருக்கக்கூடிய சுகபோக இயல்பு தசரதனுக்கும் இருந்ததாகக் கேள்வி. இப்போது அவை பற்றிய ஆய்வுத் தேவை எதுவுமில்லை.
எனினும் இத்தகைய தசரதனுக்குப் பிறந்த இராமன் ஏகபத்தினி விரதனாக-தர்மத்தை நிலைநாட்டும் தலைவனாக விளங்கினான். 

ஆக, தசரதச் சக்கரவர்த்தியை விட இராமன் எத்தனையோ மடங்கு உயர்வானவனாக விளங்கினான் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. 
ஆயிரக்கணக்கான மனைவியரை வைத்திருந்த தசரதனுக்குத்தான் ஏகபத்தினி விரதன் பிறந்தான் என்றால் இதுதான் உலகம். 

ஆக, எம் முன்னோர்கள்; எம் குருமார்கள்; எம் ஆசிரியர்கள்; எம் விரிவுரையாளர்கள் தவறு விட்டார்கள் என்பதற்காக பிள்ளைகள்; மாணவர்கள்; இளைஞர்கள் தவறு விடுவதென்பது உலக ஒழுங்குக்கு உரியதன்று. 

என்னை விட என் பிள்ளை அறிவில், பண்பில், ஒழுக்கத்தில் உயர்வானவன். என் பிள்ளையை விட என் பிள்ளையின் பிள்ளை இன்னும் உயர் குணம் படைத்தவன் என்பதாகவே பரிணாமம் அமைதல் வேண்டும். அப்போதுதான் தர்மமான உலகம் உருவாகும். 

எனினும் துரதிர்ஷ்டவசமாக எங்கள் மண்ணில் நிலைமை வேறுவிதமாக அமைகிறது. அத்தகையதொரு அமைவு எங்கும் அதர்மத்தைப் பரப்பி உலக வாழ்வைத் துன்பமாக்கி விடும்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது என்ற செய்தி கண்டு கலங்கிப் போனவர்கள் பலர். 

ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கத்தில் தமிழ் மாணவர்களே கல்வி கற்றனர். விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத் தர்கள் என அனைவரும் தமிழர்கள் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இன்றைய சூழ் நிலை அதுவன்று. 

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்வதுடன் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுவோரும் மூவினம் சாந்தவர்களாக உள்ளனர். 
எனவே இத்தகையதொரு சூழமைவானது தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையையும் புரிதலையும் ஏற்படுத்துவதற்குப் பேருதவியாக அமையும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த சிங்கள மாணவர்கள், தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள் என்று தமது இடங்களில்-தமது மக்களுக்கு சொல்லுகின்ற நிலைமையை நாம் அனைவரும் சேர்ந்து தோற்றுவிக்க வேண்டும்.
அதேபோல் சிங்கள மாணவர்கள் எங்களுடன் எத்துணை தூரம் ஒத்துழைத்தார்கள் என்பதாக தமிழ் மாணவர்கள் புகழ வேண்டும். 

இரண்டு நிலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் எங்கள் சகோதரர்கள் என்பதான சூழமைவை ஏற்படுத்தும் போதுதான் எதிர்காலத்திலேனும் புத்திஜீவிகள் மத்தியில் இனவன்மங்கள் தோற்றம் பெறாமல்; இலங்கைத் தீவு, இங்கு வாழும் அனை வருக்கும் சொந்தம் என்ற நிலைமை ஏற்படும். 

மேற்குறிப்பிட்ட சூழமைவுக்குப் பாதகமான தாக்கங்கள் இருக்குமாயின் எதிர்கால இலங்கை யும் விடிவு அற்றதாகவே இருக்கும். ஆகையால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசியல் என்ற சாக்கடை கலவாத தூய்மை நிலவ அனைவரும் பாடுபடுவோம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila