இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் போராடி உயிர்நீத்த தமது உறவுகளை நினைவு கூறுவதனை அங்கீகரிக்கும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்களின் கருத்தறியும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மக்கள், வடக்கில் தற்போது அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, 1983இல் எங்கெங்கு இராணுவ முகாங்கள் அமைந்தனவோ அந்த இடங்களில் மாத்திரமே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் கோரினர். அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள இனம் ஒன்று அழிவுகளைச் சந்தித்த யுத்த வெற்றி கொண்டாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், இனப்பிரச்சினை தீர்விற்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் கோரினர். இவ்வாறு வழங்கப்படும் சமஷ்டி அதிகாரத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இனங்களை பிரித்துக்காட்டாத தேசியக் கொடி தேவை என்றும் கோரிக்கை விடுத்தனர்.