2016ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தர் நம்பியிருக்கும் வேளையில், தென் பகுதி அரசியலில் குழப்பங்களும் குத்துக்கரணங்க ளும் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தனக்குத் தோல்வியாக அமைந்தபோது ஆட்சி அதிகாரத்தை கைவிட்டுப் போக மனம் இல்லாதிருந்த மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஆட்சிபீடத்தைத் கைப்பற்றுவதில் தற்போதைய அரசு மிகவும் கவனமாக நடந்து கொண்டது.
ஆ... ஊ... என்று சத்தம் வைக்காமல் அப்பு! ராசா என்ற அணுகுமுறைக்கூடாக மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.
ஜனாதிபதிப் பதவியில் மைத்திரி; பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க என்ற தேசிய ஆட்சி உருவான போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கணிசமானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பக்கமே இப்போதும் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆக, ஜனாதிபதிப் பதவியில் மைத்திரி இருக்கின்ற போதிலும் தனது கட்சிக்காரர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அவரின் இறுக்கம் போதாது என் பது பொதுவான கருத்து.
நிலைமை இவ்வாறாக இருக்கும்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோ´த ராஜபக்ச கைது செய்யப்பட்டமை மகிந்த ராஜபக்சவுக்கு தீராத கவலையைக் கொடுத்தது.
அது மட்டுமன்றி தனது துணைவியார் சிராந்தி ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டமை மகிந்த ராஜபக்சவுக்கு இந்த உலகையே வெறுக்கச் செய் தது. இதனால் இடியேறு கேட்ட நாகம் போலான மகி ந்த ராஜபக்ச இந்த ஆட்சியை நிர்மூலமாக்குகிறேன் பார் என்று களமிறங்குகிறார்.
விடுதலைப் புலிகளை போரில் வென்றவர் என்ற மதிப்பு இன்னமும் மகிந்த ராஜபக்வுக்கு இருக்கவே செய்கிறது.
இதனால் சிங்கள மக்களில் கணிசமானவர்களை தனக்கு ஆதரவாகத் திரட்டி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்ற முயற்சியில் மகிந்த ராஜபக் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எதுவாயினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது ஜனாதிபதி மைத்திரிக்கு இருக்கக்கூடிய பலம்.
இது தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகச் சிறந்த ராஜதந்திரி என்பதால் மகிந்த ராஜபக்சவின் கோபா வேசத்தை அடக்க அல்லது தணிக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பார் என்பதும் உண்மை.
எது எப்படியாயினும் தென்பகுதியில் எழக்கூடிய குழப்பங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான தீர்விலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை.
அதாவது, தென்பகுதி அரசியலில் இப்போது இருக் கக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் தருகின்ற அல்லது தந்த அதிகாரங்களுடன் தமிழ் மக்கள் அமைதியாக இருப்பதே நல்லது.
அதை மீறி சமஷ்டி-சுயாட்சி, வடக்குக் கிழக்கு இணைவு என்று கேட்டால் எதுவும் தர முடியாத நிலைமை ஏற்படும் என்ற எச்சரிக்கையை நல்லாட்சி விடும்.
சில வேளைகளில் 2016 என்ற சம்பந்தர் ஐயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போனாலும் ஆச்சரிய ப்படுவதற்கு இல்லை