யுத்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், உறவினர்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, ‘யுத்த நிறைவில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே?’, ‘அரசே எமது பிள்ளைக்கு என்ன நடந்தது?’, அரசே ஐ.நா பரிந்துரையை நிறைவேற்று’, ‘எமது பிள்ளைகள் எப்போது திரும்பி வருவார்கள்?’, ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலையான வாழ்வாதாரம் கொடு’ என்பன உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, காணாமல் போனோரின் உறவினர்களால் மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப்பிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.