வடக்கின் முதலமைச்சர் தீவிர போக்குடையவரா?


வடக்கு மாகாண சபை தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை முன்வைத்த நிலையில் தென்பகுதி பேரினவாதிகள் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் கடும் போக்குடையவராகவும் நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் செல்பவராகவும் விமர்சித்து வருகின்றனர்.

வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அனைத்துத் தரப்பினரதும் மரியாதைக்குரியவர். சர்வதேசத்திலும் அவருக்கு அதி உயர் மதிப்பு உண்டு.

இந்நிலையில் அவரை தீவிர போக்குடையவ ராகக் காட்டுவதில் பேரினவாதிகள் கடுமையாக நிற்கின்றனர். தமிழ் மக்களின் தலைவர் என்ற தகைமையில் இருக்கக்கூடிய ஒருவரை தீவிர போக்குடையவராக தென்பகுதிப் பேரினவாதிகள் காட்டுவதன் மூலம் அவர்கள் எதனைச் சாதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. 

வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டம் எத்தகைய விடயங்களை முன்வைக்கின்றது என்பதை முழுமையாக அறிய முன்னரே தென்பகுதி பேரினவாதிகள் அதனை விமர்சிப்பதும் வடக்கின் முதலமைச்சர் நாட்டை பிரிவினைக்கு உட்படுத்த முற்படுகின்றார் என்று கூறுவதும் இனவாதத்தைத் தொடர்ந்தும் சிங்கள மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என பேரினவாதிகள் தூண்டுவதாகவே இருக்கும்.

எது எப்படியாயினும் வடக்கு மாகாண சபை முன் வைத்த தீர்வுத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை பிரிவினைவாதியாக விமர்சிப்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் .

எனவே பேரினவாதிகள் வடக்கின் முதலமைச்ச ருக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களை முறியடிக்கும் கடமைப்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு மாகாண சபைக்கும் உண்டு  எனலாம். 

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்களே இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பதால்,
வடக்கின் முதலமைச்சர் தொடர்பாக சிங்களப் பேரினவாதிகள் முன்வைக்கும் விமர்சனங்களை பாராளுமன்றத்தில் கண்டித்து உரையாற்றுவது சம்பந்தரின் தார்மீகக் கடமையாக இருக்கும்.

இதேபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட் டத்தை வடக்கு மாகாண சபையில் கொண்டு வர வேண்டும் எனக் கூறி அப்படி ஒரு தீர்வுத்திட்டத்தை முதலமைச்சர் மூலம் முன்மொழிய வைத்த  வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தென்பகுதிப் பேரினவாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் தங்களின் எதிர்க்கருத்தை சபையில் பதிவு செய்ய வேண்டும்.

இல்லையேல் வடக்கின் முதலமைச்சர் மூலம் தீர்வுத்திட்ட வரைபை முன்மொழியச் செய்து அவரை ஒரு தீவிர போக்குடையவராக தென்பகுதியில் காட்ட வடக்கு மாகாண உறுப்பினர்கள் தீட்டிய திட்டமே சபையில் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் என்பதாக நிலைமை மாறி விடும் என்பதால் வட க்கு முதலமைச்சர் குறித்து தென்பகுதி பேரினவாதிகள் முன்வைக்கும் பிரசாரங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் தலையாய கடமையாகும்.   
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila