ஒற்றுமையின் மூலமே அதிகாரப் பகிர்வின் முழுமையை பெற்றுக்கொள்ள முடியும்: சம்பந்தன்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாகிய நாம் எங்களுடைய ஒற்றுமை மூலமாகவே அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையினை இன்று(சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘நாம் தற்பொழுது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாடாளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறோம். பிரேமதாச காலத்தில், சந்திரிகா காலத்தில், ரணில் காலத்தில், மகிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது. சர்வ கட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போதும் தமிழ் மக்கள் பேரவை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வடமாகாகண சபை தங்களுடைய கருத்தக்களை முன்வைத்திருக்கிறார்கள்.  அரசியல் சாசன குழு என்பது பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம். இது போன்ற நிலையில் மக்களுடைய கருத்துக்களை அறியும் வகையில் மக்களைச் சந்தித்து மக்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளனர்.
இதன் அடிப்படையில் ஏற்படுகின்ற தீர்வு, உறுதியான, நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனை முன்வைத்துத்தான் நாமும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தத் தீர்வு விரைவில் ஏற்பட வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. விசேடமாக தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக நிற்கவேண்டியது அவசியம். எங்களுடைய பலம் ஒற்றுமையில் தான் தங்கியிருக்கிறது. அதே விதமாக முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது நீங்களும் ஒற்றுமையாக, ஒருமித்து நிற்க வேண்டும். உங்களுடைய பலமும் அதில் தான் இருக்கிறது.
இரண்டுக்கும் மேலாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒருமித்து நிற்க வேண்டும். அந்த அதிகாரப் பகிர்வின் பெறுமதியை நாங்கள் முழுமையாகப் பெற வேண்டுமாக இருந்தால் தமிழ் முஸ்லிம் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும். செல்வநாயகம், டட்லியுடன் செய்த ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்காக மட்டும் செய்யவில்லை, தமிழ்பேசும் மக்களுக்காக செய்யப்பட்டதாகும்.
தேசியப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வர வேண்டும். ஜனாதிபதி இந்தக் கருமத்தில் உறுதியாக இருக்கிறார். பிரதமரும் அரசாங்கமும் இந்தக் கருமத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக நம்புகிறோம். ஆகவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நாங்கள் எவருக்கும் அநீதி நடைபெறுவதை அனுமதிக்காமல் செயற்பட வேண்டும். அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்ற வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila