தீர்க்கதரிசனங்களே வெற்றியைத் தந்தன


இந்த நேரம் வரையானதே நமக்குத் தெரிந்தது. அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதை எவரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. இதனால் முடிந்த காலம் உன் கையில்; முடியாத காலம் இறைவனின் கையில் என்று கூறப்படுவதும் உண்டு.

எனினும் எதிர்காலம் பற்றியதான தரிசனம் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அவ் வாறு இருந்தால்தான் வாழ்க்கை வெற்றி பெறும். எதிர்காலம் பற்றிய தரிசனத்தை தீர்க்கதரிசனம் என்கிறோம். தீர்க்கதரிசனங்களே இந்த உலகில் வெற்றியை-அமைதியை-சமாதானத்தை ஏற்படுத்தித் தந்துள்ளன. 

எனினும் குறுகிய மனநிலை உடையவர்கள், தீர்க்கதரிசனம் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. இத்தகையவர்கள் மற்றவர்கள் முன்வைக்கும் தீர்க்கதரிசனத்தையும் ஏற்பதில்லை. 
இதனால் தீர்க்கதரிசனங்கள் நிஜமாகும் போது வேதனைப்படும் அவலம் ஏற்படுகிறது. 

இதற்கு இலங்கைத் திருநாடு நல்லதோர் உதாரணம். இந்த நாட்டில் இன்றுவரை இனவாதம் பேசப்பட்டு வருகிறது. இனவாதத்தால் பல்லாயிரக் கணக்கான மனிதர்கள் உயிரிழந்து போயுள்ளனர்.
ஒரு நாட்டுக்குள் ஏற்பட்ட இனக்குரோதங்கள் மனிதர்களைத் துடிக்கத் துடிக்க கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

இனம்-மதம்-மொழி என்ற பேதங்களை மறந்தால் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உண்மை உணரப்படும். இந்த உண்மை உணரப்பட்டால், பின்பு சித்திரவதை, கொலை என்ற பேச்சுக்கே இட மில்லாமல் போய்விடும்.

இந்த உண்மையை உணர்த்துவதற்கு இந்த நாட்டில் ஆட்கள் இல்லாமல் போய்விட்டனர். ஒரு காலத்தில் தந்தை செல்வநாயகம் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் இனப்பிரச்சினை குறித்து மிகத் தெளிவாக கூறினார். தமிழர்களுடைய பிரச்சினையை தீருங்கள் என்று மன்றாடினர். அதற்காக அரச தலைவர்க ளுடன் ஒப்பந்தங்களைச் செய்தார்.

எனினும் அந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற அரசுத் தலைவர்கள் மறுத்து விட்டனர். 
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறினால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்து வார்கள் என்று தந்தை செல்வா தெட்டத்தெளிவாக கூறினார். அவர் கூறிய தீர்க்கதரிசனத்தை அப்போது எவரும் உணர்ந்திலர். 

பின்நாளில் நடந்தது என்ன? என்பதை ஒரு கணம் சிந்திந்தால், இலங்கை பாராளுமன்றத்தில் தந்தை செல்வநாயகம் எடுத்துரைத்த தீர்க்கதரிசனத்தை கண்டு கொள்ள முடியும். 
அன்று தந்தை செல்வா எடுத்துரைத்த தீர்க்க தரிசனம் உணரப்படாமல் போனது. இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு பெரும் தீர்க்கதரிசனத்தை கூறியுள்ளார். 
தீராத இனப்பிரச்சினையால் ஆயுதக் கிளர்ச்சி மீண்டும் தலைதூக்கும் என்பதே அவர் உரைத்த தீர்க்கதரிசனமாகும். 

இந்த நாட்டின் ஜனாதிபதி ஒருவர் மிகத்தெளிவாக உரைத்த தீர்க்க தரிசனம் இது. 
எனினும் இதற்கு தீர்வு காணவேண்டிய தகுதியும் அவரிடமே இருப்பதால் அவரே அதையும் செய்தாக வேண்டும்.   
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila