இராணுவத்தினரின் தேவைக்காக யாழ்.ஆணைக்கோட்டை கூழாவடி பகுதியிலுள்ள பொதுமக்கள் காணியை சுவீகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு நில அளவையாளர்கள் நில அளவைக்காக சென்றிருந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்திய மக்கள், தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்குச் சென்று, காரியாலயத்தை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததோடு, தமக்கு தீர்வு வழங்க வேண்டுமென அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்தை காரியாலத்திற்குள் வைத்து பூட்டியுள்ளனர். எனினும், அரசாங்க அதிபர் வேறு வழியாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தமக்கான தீர்வு கிடைக்கும்வரை அங்கிருந்து செல்லமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் காரியாலயத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் உள்ளபோதும், இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை காணப்படுவதாலேயே, இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பாரிய பிரச்சினையை தோற்றுவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ சுவீகரிப்பிற்கான காணி அளவை மீண்டும் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது யாழ்.ஆணைக்கோட்டை கூழாவடி பகுதியிலுள்ள காணிகளை இராணுவத்திற்கு கையகப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நில அளவீடு, பொதுமக்கள் மற்றும் வட மாகாண சபையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்களுக்குச் சொந்தமான 16 பரப்பு அளவுடைய குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கு, நில அளவையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு சென்றுள்ளனர். இவர்களது அலுவலக நேரம் காலை 8.30 என்றபோதும், காலை 7.30 மணிக்கே குறித்த இடத்திற்கு நில அளவையாளர்கள் சென்றதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுதது, அங்கு குழுமிய காணி உரிமையாளர்கள், அவர்களது உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன், விந்தன் கணகரட்னம் ஆகியோர், குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதோடு, குறித்த காணி பொதுமக்களுக்கு சொந்தமானதென குறிப்பிட்டு கடிதமொன்றையும் கையளித்துள்ளனர். மக்களுக்குச் சொந்தமான குறித்த காணிகளை சுமார் 20 வருடங்களாக இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில், காணி உரிமையாளர்கள் வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் குறித்த காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில், அதனை விடுவிக்குமாறு ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்துள்ளது. எனினும், இராணுவத்திற்காக குறித்த காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையாகவே, இந்த நில அளவீட்டு முயற்சி இடம்பெற்றதாக காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.