
முல்லைத்தீவு கடலில் ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மட்டுமே, அங்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, சில அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது தொடர்பாக அவர், விளக்கமளித்துள்ளார்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவில் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளவர்கள் அங்கு மீன்பிடியில் ஈடுபடுவதை தடை செய்யுமாறு முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கம் கோரியுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவில் அடாவடித்தனமாக குடியமர்ந்து வாடிகளை அமைத்துள்ள சிங்கள மீனவர்களால் அங்கு பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபட்டு வந்த தமிழ் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே, கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர், முல்லைத்தீவு கடலில் ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மட்டுமே, அங்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் வடக்கில் உள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் இவ்வாறு அத்துமீறிக் குடியமர்ந்துள்ள மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட முறுகலை அடுத்து, அங்கு சென்ற கிராம அதிகாரியை சிங்கள மீனவர்கள் தாக்கியிருந்தனர்.
அதேவேளை இராணுவத்தின் 593ஆவது பிரிகேட் கட்டளை அதிகாரியான கேணல் சமந்த சில்வா, கிராம அதிகாரியின் அடையாள அட்டைகளைப் பறித்து அவரை அவமரியாதைக்குள்ளாக்கியிருந்தார்.
இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கிராம அதிகாரிகள் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.