அரசியல் தலையீடுகளை நான் தைரியத்துடன் எதிர்கொண்டேன். எனினும் சட்டத்துக்கு அப்பால் சென்று செயற்பட மறுத்தேன். இதனால் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரான காலப் பகுதியானது பொலிஸ் மா அதிபராக கடமையாற்ற உகந்த சூழலைக் கொண்டிருக்கவில்லை. அதனால் அந்தக் கதிரையில் நான் பாரிய சவால்களை சந்தித்தே அமர்ந்திருந்தேன். தற்போது அந் நிலைமை மாறிவிட்டது. அதனை அச்சமின்றி தெரிவிக்கின்றேன் என்றும் என்.கே.இலங்கக்கோன் சுட்டிகாட்டினார்.
ஓய்வு பெறுவதையடுத்து பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ஓய்வு பெறும் பொலிஸ்மா அதிபர் இந்த விடயங்களை தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
36 வருட சேவையின் பின்னர் நான் இன்றுடன் ஓய்வு பெறுகிறேன். நான் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் எனது கடமைகளை நிறைவேற்ற ஊடகங்கள் எனக்கு தந்த ஒத்துழைப்பு மறக்கப்பட முடியாதது. அதற்கு நன்றி செலுத்துவது எனது பொறுப்பு.
நான் 4வருடங்களும் 10 மாதங்களும் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளேன். அண்மைய பொலிஸ் வரலாற்றில் இவ்வளவு நீண்டகாலம் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர் நான்தான். . இந்த காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் நாட்டு மக்களுக்கு எனது சேவையை சரிவர செய்துள்ளேன் என்று நம்புகிறேன்.
பொலிஸார் வழிதவறும் பொழுது அதனை சுட்டிக்காட்டி பொலிஸார் தொடர்பில் நியாயமான விமர்சனங்களை முன்வைத்து சரியான பாதையில் பயணிக்க ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்பு நன்றிக்குரியவையாகும்.மக்களுக்கு பொலிஸார் மீது நம்பிக்கை முக்கியம். அது இல்லையெனில் பொலிஸ் சேவையின் நிலைமை தொடர்பில் கூறவேண்டியதில்லை.
பொலிஸ் மா அதிபர் பதவியில் இருப்பது என்பது ஒன்றும் இலகுவான விடயமல்ல. பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். நான் பொலிஸ் மா அதிபராக தெரிவாகி ஒரு மாதத்திற்குள்ளேயே சவால்கள் ஆரம்பித்தன. கிரிஸ் பூதம் பிரச்சினையே அதுவாகும். அது முதல் எம்பிலிப்பிட்டிய வரையில் பல சவால்களை எதிர்கொண்டு விட்டேன்.எனது காலப்பகுதியில் அரசியல் ரீதியிலும் பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகின.
9 மாகாண சபை தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உட்பட 11 தேர்தல்கள் இடம்பெற்றன. அதில் இறுதியாக ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் முக்கியமானவை.2011 ம் ஆண்டு குற்ற விசாரணைகள் தீர்வு தொடர்பான சதவீதம் 44 ஆக இருந்தது. இதனை 59 வீதமாக உயர்த்த என்னால் முடிந்தது.
30 வருட காலயுத்தத்தில் தேங்கி கிடந்த 68000 நீதிமன்ற உத்தரவுகளை எம்மால் அமுல் செய்ய முடிந்தது. விசேடமாக பொதுமக்கள் உறவைக் கட்டியெழுப்பி உள்ளோம். போதைப் பொருள் சுற்றிவளைப்புகளை அதிகரித்துள்ளோம்.அதனாலேயே 2013ல் 260 கிலோ ஹெரோயினும் அண்மையில் 110 கிலோ ஹெரோயினும் சிக்கியது.பொது மக்களின் நிறுவனம் என்ற ரீதியில் அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே பொலிஸாரின் முக்கிய பணியாகும்.
பொது மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நாம் அக்கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டும்.அவ்வாறு சேவை செய்யும் போது நான் பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானேன். எனினும் காலம் அதற்கு பதில் சொல்லும்.எனது நடவடிக்கையில் மனக் கசப்புக்கள் ஏற்பட்டிருப்பின் மன்னிப்பு கோருகிறேன்.
நான் பதவியேற்கும் போதும் பொலிஸ் சேவையில் இணையும் போதும் இருந்த அதே சந்தோஷத்துடனேயே ஓய்வு பெறுகிறேன் என்றார்.
கேள்வி: பதவி நீடிப்பு கோரியிருக்கலாமே?
பதில்: அப்படி ஒரு எண்ணம் எனக்கு இருக்கவேயில்லை. நான் பதவியேற்கும் போது பதவிக்காலம் நிறைவடைந்ததும் ஒரு நாள் கூட இக்கதிரையில் அமரமாட்டேன் எனக் கூறினேன். அதனையே இன்று நான் ஓய்வாக அறிவிக்கிறேன்.
கேள்வி: உங்கள் காலப்பகுதியில் நீங்கள் அரசியல் உத்தரவுகள், தலையீடுகளை எதிர் கொண்டீர்களா?
பதில்: அரசியல் – அரச சேவையை குழப்பிக் கொள்ள கூடாது. அரச சேவையாளர்கள் தமது கடமையை சரிவர செய்யாத போது அது தொடர்பில் தட்டிக் கேட்க மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அரசியல் வாதிகளுக்கு உரிமை உள்ளது.நாம் எமது கடமைகளை சரிவர செய்யும் போது அவர்கள் தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவு. தேவையற்ற தலையீடுகள் வரின் அதனை தைரியத்துடன் எதிர்கொண்டு நிராகரிக்க வேண்டும்.
கேள்வி: உங்களுக்கு அவ்வாறு வந்ததா?
பதில்: ஆம், அவற்றை நான் அவர்களுக்கு விளக்கி சட்டத்துக்கு அப்பால் சென்று செயற்பட முடியாது என நிராகரித்த சந்தர்ப்பங்கள் பல உள்ளன. அப்படி இல்லையாயின் எனது காலப்பகுதியில் 200 க்கும் அதிகமான அரசியல்வாதிகளை கைது செய்திருக்க முடியாது.
கேள்வி: பொலிஸ்மா அதிபர் பதவியை இராஜினாமா செய்ய தோன்றியதுண்டா? பின்னடைவுகள் ஏற்பட்டதா?
பதில்: ஆம், பல சந்தர்ப்பங்களில் பதவியை இராஜினாமா செய்ய யோசித்ததுண்டு. பின்னடைவுகளும் ஏற்பட்டன. எனினும் தைரியமாக எதிர்கொண்டதால் தொடர்ந்தும் சேவை செய்ய முடிந்தது.
கேள்வி: பொலிஸாரின் நலன், பதவி உயர்வு, இடமாற்ற விவகாரத்தில் உங்கள் திட்டங்கள் தோல்வியை சந்தித்துள்ளனவே?
பதில்: அப்படி இல்லை. அதன் பிரதிபலனை இன்னும் 2, 3 மாதங்களில் பார்க்கலாம். பொலிஸ் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பில் ஸ்திரமான திட்டம் தயாராகிவிட்டது.காப்புறுதி, சம்பள அதிகரிப்பு விடயங்களும் இறுதிகட்டத்தில் உள்ளது. எனவே அது எனக்கு வெற்றியே.
கேள்வி: கடந்த ஒரு வருடத்துக்கு முன் இருந்த காலப்பகுதியும் தற்போதைய சூழலும் எப்படி? நீங்கள் கடமைகளை செய்யும் போது அதனை எப்படி உணர்ந்தீர்கள்?
பதில்: அச்சமின்றி இதற்கு பதிலளிக்கின்றேன். புதிய பொலிஸ் மா அதிபர் அதிஷ்டக்காரர். கடந்த வருடத்துக்கு முன் எமது கடமைகளை செய்ய அமைச்சு மட்டத்தில் எமக்கு எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. தற்போது பூரண ஒத்துழைப்பு கிடைக்கிறது.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலன்று இடம்பெற்றதாக கூறப்படும் சதி முயற்சியின் போது நீங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. நீங்கள் அதனை நிராகரித்ததால் அந்த சதி சாத்தியப்படவில்லையாம். அது உண்மையா?
பதில்: உண்மையில் அது குறித்து புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து முடித்துவிட்டது. விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அது தொடர்பில் யாருக்கு எதிராக வழக்கு தொடர்வதென தீர்மானிப்பர்.
கேள்வி: தூதுவர் பதவிகள், அரசியல் பதவிகளை ஏற்பீர்களா?
பதில்: இன்னும் எதையும் தீர்மானிக் கவில்லை. முதலில் ஓய்வாக இருப்பேன்.