வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறீலங்கா அதிபர் மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பு எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண சபையில் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 48ஆவது அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பான பிரேரணை ஒன்றை மன்றில் சமர்ப்பித்தார்.
இதேவேளை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடந்த திங்கட்கிழமை காணி அபகரிப்புச் செய்வதற்காக நில அளவையில் ஈடுபட்ட சம்பவம் குறித்தும் தெரிவித்துள்ளார்.
இவற்றுக்கு பதிலளிக்கும் முகமாக உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர், தன்னை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோர் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இச்சந்திப்பு எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது இப்பிரச்சனைகள் தொடர்பாக அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும்.
எனவே வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை இராணுவ அத்துமீறல்கள், காணி அபகரிப்புக்கள் தொடர்பான தகவல்களை தன்னிடம் ஒப்படைக்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.