10 ஏக்கர் நிலப்பரப்பில் 25 ஆயிரம் மிதிவெடிகள்! (முகமாலையில் புதைக்கப்பட்டுள்ளன)


முகமாலை பகுதியில் ஒவ் வொரு பத்து ஏக்கர் நிலத்திலும் 25 ஆயிரம் மிதிவெடிகள் புதைக்கப்பட் டுள்ளதாக மிதிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ற்றின் வடக்கு மாகாணத்திற்கான செயற்பாட்டு முகாமையாளர் ரோஸ் ரொப் தெரிவித்துள்ளார். 

மேலும் குறித்த இடத்தில் இன்னமும் நூறு ஏக்கருக்கு அதிகமான நிலத்தில மிதிவெடிகள் புதைக் கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதினெட்டு வருடங்களின் பின்னர் வேம்படுகேணி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தமது கிராமங்களை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். 

இதன் போது அங்கு மிதிவெடியகற்றலுக்கு பொறுப்பாக இருந்த குறித்த பொறுப்பதிகாரி மக்களிடம் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் இத்தனை வருடங்களாக இங்கு பணியாற்றி வருகின்றோம். இதுவரை மிருகங்களையும் பறவைகளையும் தான் பார்த்தோம். இன்று தான் மனிதர்களை காண்கின்றோம். 
இத்தனை வருடகாலம் மிதி வெடியகற்றல் தாமதமாகி வருவதற்கு இங்கு என்ன நடந்தது என்பதனை மிக விரைவில் நான் கூறுவேன்.

மிதிவெடி அகற்றலில் மிக கஷ்டமான பிரதேசமாக முகமாலை உள்ளது. நாம் இங்கு இதுவரை 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருபத்து ஐயாயிரம் மிதிவெடிகளை தோண்டி எடுத்துள்ளோம். இந்த பணியில் பலர் காயமடைந்தும் உள்ளனர். 
வடக்கில் உள்ள நூறு வீதமான மிதிவெடிகளில் ஐம்பது வீதமான மிதிவெடிகள் முகமாலை பிரதேசத்தில் தான் உள்ளன.

இந்தளவு அதிகமான மிதிவெடிகளை அகற்றுவதற்கு தேவையான இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் தற்போது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமது இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்ற மக்களுடைய விருப்பத்தினை கருத்திற்கொண்டு மிதிவெடி அகற்றலுக்கு மக்கள் பிரதேசங்களுக்கே அதிகளவு முக்கியத்துவம் வழங்கி வருகின்றோம்.

இலங்கை அரசாங்கத்திடம் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மேலும் எமது பணியை விரைவுபடுத்த முடியும். மிதிவெடி அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக நிதிப்பிரச்சினையும் ஒரு காரணமாக உள்ளது. 

எமக்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளே நிதியுதவி வழங்கி வருகின்றன. இவர்களிடம் மேலும் பணம் தருமாறு வற்புறுத்தி கேட்க முடியாது.
இப்போது தான் மக்களுடைய காணிகள் எது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலில் மக்களுடைய காணிகளில் மிதிவெடி அகற்றலை மேற்கொண்டு அவர்களது காணிகளை முதலில் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். 
இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டிருந்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila