போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயன்முறைகளில், அனைத்துப் பங்களிப்பை சிறீலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியும் நெதர்லாந்துத் தூதுவருமான ரொடெறிக் வான் ஸ்கிரேவன் தெரிவித்துள்ளார்.
அவரின் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, நீண்ட செயன்முறையின் ஆரம்பக்கட்டத்திலேயே சிறீலங்கா இன்னமும் இருக்கின்றது.
ஐநா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா அளித்த வாக்குறுதிகளில் இன்னும் நிறைவேற்றவேண்டியவை அதிகமாக உள்ளன.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பனவற்றை உள்ளடக்கிய இந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
நம்பகமானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பொறுப்புக்கூறலில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியமாகும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிறீலங்கா நீக்கவேண்டும். சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடவேண்டும்.
வடக்குக் கிழக்கில் இயல்புவாழ்க்கையை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுதலை செய்யவேண்டும் அல்லது சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும்.
பாதுகாப்புப் படையினரின் பாலியல் மற்றும் பாலினத்தை அடிப்படையாக கொண்ட வன்முறைச் சம்பவங்களை தடுக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் விடயங்களில் இராணுவத்தின் தலையீட்டை உடனடியாக நிறுத்தவேண்டும். எஞ்சியுள்ள காணிகளையும் விடுவிக்கவேண்டும்.
கடந்த ஆண்டு ஐநாவில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.