குருஷேத்திரத்தில் மகாபாரதப்போர் 18 நாட்கள் நடந்தன. வலம்புரிச் சங்கெடுத்து நாதம் எழுப்பி போர் தொடங்குகிறது.
பாண்டவர்களும் கெளரவர்களும் போர் தொடுக்கத் தயாராகின்றனர். வீஷ்மர், துரோணர், அசுவத்தாமா உள்ளிட்டவர்கள் துரியோதனன் பக்கம் நிற்க,
கண்ண பரமாத்மா அருச்சுனனுக்கு தேர்ச் சாரதியாக போர் தொடங்குகிறது.
வில்லுக்கு விதுரன் என்பான் நடுநிலை தவறா நன்நெறி காக்க தலைப்பட்டான்.
18 நாள் போரில் இருதரப்பிலும் ஏகப்பட்ட இழப்புக்கள். முதலிலேயே துரியோதனனைக் கொன்றிருந்தால் போர் நடந்திருக்காது என்று விமர்சனம் செய்வோரும் உளர்.
அவர்களின் விமர்சனம் அவர்கள் மட்டில் நியாய மாயினும் எதற்கும் ஒரு காலமும் நேரமும் தேவைப் படுகிறது. இது தவிர்க்க முடியாத நியதி.
எனவே துரியோதனனைக் கொல்வதற்கு போர் தொடங்கி 18 நாள் தேவையாகிறது. 18ஆவது நாள் நேரம் நெருங்க துரியோதனனின் தொடையில் தாக்குமாறு பார்த்த சாரதி சைகை செய்கிறான்.
நேரமும் காலமும் விதியும் நெருங்க நெடுந்தோள் கொண்ட வீமன் கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அறைய அவன் உயிர் பிரிகிறது.
ஆக, எதுவும் எடுத்த எடுப்பில் சரிவரமாட்டாது. எதற்கும் நேர காலம் உண்டு என்பது ஏற்புடையதே. அத னால்தான் அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா... என்று ஒளவைப் பாட்டி பகர்ந்தார்.
இதை நாம் சொல்லும் போது ஏன் இந்தக் கதை என்று நீங்கள் கேட்கலாம். இதற்கும் ஒரு காரணம் உண்டு.
இன்றைய தமிழ் அரசியல் என்பது மிகப்பெரியதொரு பலவீனத்தில் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு என்று கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தர் அறிவித்திருந்தாலும் அதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என்பதற்கு புறநிலைச் சூழ்நிலை சான்றாக அமைகிறது. அப்படி த்தான் 2016க்குள் தீர்வு என்றால், அது ஒற்றை ஆட்சிக்குள் என்பதாக மட்டுமே இருக்கும்.
ஆக, கூட்டமைப்பின் உத்தரவாதங்கள் அவர்களின் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்.
இதற்கு மேலாக கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய அங்கத்துவ கட்சிகளே கூட்டமைப்பை விமர்சிக்கின்ற அளவு நிலைமை உச்சமடைந்து விட்டது.
வடக்கு மாகாண சபையை திறமையாக இயங்க வைக்க முடியாமைக்கான காரணம் என்ன? என்பதை கூட்டமைப்புக்குள் இடம்பெறும் கட்சி ஒன்றின் தலை வர், இரா.சம்பந்தரிடம் தெட்டத்தெளிவாக-பகிரங்க மாக கூறியுள்ளார்.
அதேநேரம் எதற்கும் நாங்கள் யோசித்து முடிவு எடுப்போம்; அது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்; பொறுத்திருந்து பார்ப்போம் என்ற இரா.சம்பந்தரின் பதில்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று நினைப்பது மடமைத்தனம்.
ஆகவே இப்போது இருக்கின்ற சூழ்நிலை என்பது வீமன், துரியோதனனின் தொடையில் அடித்த நேரமாக உள்ளது.
இந் நேரத்தில் கூட்டமைப்பை புனரமைப்புச் செய்தல் அல்லது மாற்று அரசியல் தலைமையை உருவா க்குதல் என்ற வேலைத் திட்டத்தை தமிழ் மக்கள்மீது பற்றுக் கொண்ட தமிழ் அரசியல் நேர்மையாளர்களும் புத்திஜீவிகளும் செய்தாக வேண்டும்.
இந்நேரத்தில் இதைச்செய்தால் துரோகிகள்; அரசாங்கத்தின் தரப்புக்கள் பணம் வாங்கிக் கொண்டு செய்கின்றனர் என்ற வழமையான கோங்கள் சக்தி இழந்து போய்விடும்.
ஆகையால் காலம் சரியாகஅமைந்துள்ளது. எனவே தமிழ் மக்களின் உரிமைக்காக- தமிழ் மக்களின் ஏழ்மையைப் போக்குவதற்காக- போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவலங்களை நீக்குவதற்காக- விதவைகளாக நின்று குடும்பச் சுமையை தாங்கும் எங்கள் உறவுகளுக்கு உதவுவதற்காக புதியதொரு அரசியல் கட்டமைப்புத் தேவை.
இதைச் செய்யத் தவறினால் அல்லது உரியவர்களை திருத்தத் தவறினால் எங்கள் நிலைமை மிகப்பெரும் கவலைக்கிடமாகி விடும்.