தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக மாபெரும் கையொப்ப மனுவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கியுள்ளது.
https://petition.parliament.uk/petitions/132876
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இணையத்தளம் ஊடாகத் தொடங்கப்பட்டிருக்கும் இவ் இணையக் கையொப்ப மனுவில் பிரித்தானியாவில் வசிப்பவர்கள் அல்லது பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே ஒப்பமிட முடியும்.
இம் மனுவில் பத்தாயிரம் (10,000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்குப் பிரித்தானிய அரசாங்கம் எழுத்து வடிவில் பதில் அனுப்பும்.
அதேநேரம் இம் மனுவில் ஒரு இலட்சம் (100,000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பிரித்தானிய நாடாளுமன்றத்தால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
ஆங்கில வடிவிலான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மனுவின் தமிழாக்கம் வருமாறு:
‘சிறீலங்கா அரசு மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கைகளைக் கொண்டு வரும் பணிகளை முன்னின்று செயற்படுத்துக!
தமிழர்கள் மீது இனவழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல் போன்ற குற்றங்களைப் புரிந்த சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கைகளைக் கொண்டு வரும் பணிகளை முன்னின்று செயற்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கீழ்காணும் ஒப்பதாரர்களாகிய நாம் வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதல்களின் இறுதிக் கட்டத்தில் 146,679 தமிழர்கள் கணக்கிட முடியாதவர்களாயினர் – ஒன்றில் சிறீலங்கா படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்படும் பட்சத்தில் அவை போர்க்குற்றங்களாகவும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களாகவும் நிறுவப்படும் என்று கடந்த 2015 செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர், நீதிமன்றம் ஒன்றில் சுயாதீன நீதி விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் சிறீலங்கா அரசு இனவழிப்பில் ஈடுபட்டமை நிறுவப்படக்கூடும் என்று குறிப்பிட்டார்.’
இம் மனுவில் விரைந்து கையொப்பமிட்டு சிறீலங்கா அரசு மீதான பன்னாட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு ஆவன செய்யுமாறு அனைத்துப் பிரித்தானியாவாழ் தமிழர்களுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விடுக்கின்றது.
கையொப்பமிடுவதற்கு இலகுவான 10 படிமுறைகள்
1. கீழ்காணும் இணைப்பை அழுத்துங்கள்
https://petition.parliament.uk/petitions/132876
2. அதில் காணப்படும் ‘Sign this petition’ என்ற விசையை அழுத்துங்கள்
3. திரையில் தோன்றும் படிவத்தில் ‘I am a British Citizen or UK resident’ என்ற வாசகத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் புள்ளடியிடுங்கள்.
4. பின்னர் ‘Name’ என்ற பகுதிக்குள் உங்கள் முழுப்பெயரைத் தட்டச்சு செய்யுங்கள்.
5. தொடர்ந்து ‘Email address’ என்ற பகுதிக்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்யுங்கள்.
6. இனி ‘Postcode’ என்ற பகுதிக்குள் உங்கள் வீட்டுக்கான தபால் குறியீட்டு எண்ணை முழுமையாகத் தட்டச்சு செய்யுங்கள்.
7. இப்பொழுது ‘Continue’ என்ற விசையை அழுத்துங்கள்.
8. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இருந்து மின்மடல் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
9. அம் மின்மடல் கிடைத்ததும் அதனைத் திறந்து அதில் காணப்படும் இணைப்பை அழுத்துங்கள்.
10. இப்பொழுது உங்கள் இணையக் கையொப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.
இனி இவ் இணைப்பை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்து அவர்களையும் இணைய மனுவில் ஒப்பமிட வையுங்கள்.
Add Comments