ஐரோப்பிய யூனியனுடன் நீடிப்பது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என மெஜாரிட்டி ஆக 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர்.
இதனால் பிரிட்டனில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குழப்பங்கள் மற்றும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவளித்த பிரதமர் கமரூன் அக்டோபரில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
மிக நெருக்கமான வித்தியாசத்தில் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
எனவே, மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என லட்சக்கணக்கானோர் அரசுக்கு மனு செய்துள்ளனர்.
பொது வாக்கெடுப்பு முடிந்த நிலையில் நேற்று பிரதமர் கமரூன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அப்போது கமரூன் ராஜினாமாவுக்கு பிறகு அமைய இருக்கும் புதிய அரசு ஐரோப்பிய யூனியனுடன் ஆன உறவு குறித்து மறுஒப்பந்தம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய பின்னர் 2 ஆண்டுகளுக்கு எந்த ஒரு ஒப்பந்தமும் செய்ய முடியாது பிரிட்டனின் அரசியல் சட்டம் 50-வது பிரிவு தெரிவிப்பதாக கூறப்பட்டது.
அதை புதிய பிரதமர் கவனித்துக் கொள்வார் என டேவிட் கமரூன் தெரிவித்தார்.
அதன்பின்னர் பிரதமரின் செய்தி தொடர்பாளரிடம் மக்களின் கோரிக்கையின்படி மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமா? என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், ஐரோப்பிய யூனியனில் சேருவதா? வேண்டாமா? என்பது குறித்து மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என பிரதமர் கமரூன் சார்பில் தெரிவித்தார்.