இலங்கையில் போர் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இராணுவ முகாம்கள் விலக்கிக்கொள்ளப்பட்ட இடங்களில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாது இராணுவம் இழுத்தடிப்புச் செய்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாந்துறை, மாவடிவேம்பு, ஈரளக்குளம் ஆகிய இடங்களிலேயே இந்நிலைதோன்றியுள்ளது.
இந்த இடங்களிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டாலும் அங்கே மிதிவெடி எச்சரிக்கை அறிவிப்புக்கள் காணப்படுவதால் அக்காணிகளுக்கு போகமுடியாத நிலை உருவாகியுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் காணிகளில் காணப்படும் மிதிவெடிகளை அகற்றி தம்மை விரைவாக மீளக் குடியமர்த்தவேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணியில் இராணுவ முகாம் நீக்கிக்கொள்ளப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை அங்கே கண்ணிவெடிகள் எதுவும் அகற்றப்படவில்லையென அக்காணியின் உரிமையாளர் கூறுகின்றார்.
20 வருடங்களாக தனது காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்பட்டாலும் கண்ணிவெடிகள் அகற்றும்வரை அக்காணிக்குள் நுழையவேண்டாம் என இராணுவத்தினர் அறிவித்துள்ளதால் அதற்குள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தனது காணிக்குள் தீ பரவியதால் அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதால் அருகிலுள்ள மக்கள் பீதியுடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.


