எந்த விடயத்திலும் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். ஏனெனில் ஒரு பிரச்சினைக்கு பல தீர்வுகள் பலருக்கு நியாயமாகத் தெரியும். எனினும் அதில் மிகச் சரியான தீர்வு ஒன்றாகவே இருக்க முடியும்.
இந்த நிலையில் முரண்பாடுகள் வருகின்றபோது அதனை சரியான முறையில் தீர்க்க முற்படுவதே சிறந்ததும் உகந்ததுமாகும். எனினும் முரண்பாடுகள் எங்களிடம் தனி மனித கோபங்களை, பகையை கொண்டுவந்து விடுகின்றன. இதனால் முரண்பாட்டுச் சிறுபுள்ளி ஊதிப் பருத்துப் பெருத்துக்கொள்கிறது.
இதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பொதுமக்களுக்காகி விடுகின்றன. இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதுதென்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. எனவே முரண்பாடுகளை சுமுகமாகத் தீர்ப்பது தொடர்பில் நாம் கரிசனை எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு எமது மக்கள் மத்தியில் ஒரு ஏக்கத்தைத் தருகிறது. அதாவது யாழ்.போதனா வைத் தியசாலையின் தற்போதைய பணிப்பாளர் மிகச் சிறந்த முறையில் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறார். அவரின் நிர்வாகச் சிறப்பினால் பொது மக்கள் மட்டுமன்றி வைத்தியசாலையில் பணிபுரியும் அத்தனை பேரும் திருப்தி கொண்டுள்ளனர்.
ஒரு சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக செய்யவேண்டிய அர்ப்பணிப்புகள் ஏராளம். இவ்வாறு ஒரு சுமுகமான சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு நடைமுறையில் இருக்கும் போது, பணிப்புறக் கணிப்பு என்ற போராட்ட நடைமுறைகள் உருவாகுமாயின் அது எங்களுக்கு எதுவும் சரிவராது என்ற ஒரு நிலைமையை தோற்றுவித்துவிடும்.
ஆகவே சத்திர சிகிச்சையுடன் தொடர்புடைய மருத்துவர்கள் நிலைமையை சுமுகமாக்க முன்வர வேண்டும்.
இதை செய்வதற்காக உங்கள் உரிமைகளை, உங்கள் கடமைகளை, உங்கள் அதிகாரங்களை விட்டுக் கொடுங்கள் என்று கேட்பதாக யாரும் நினைத்து விடக்கூடாது.
நமது கருத்து, எந்தப் பிணக்குகளையும் நியாயபூர்வமாக தீர்க்க வேண்டும் என்பதுடன் நிர்வாகக் கட்டமைப்பின் ஒழுங்கீடுக்கும் பங்கமில்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான்.
அதேநேரம் ஒரு வைத்தியசாலையின் இயங்கு நிலை என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. அனைத்துப் பணியாளர்களினதும் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை என்ற பணி நடந்தாக முடியும்.
எனவே வைத்தியசாலைகளில் பணியாற்றும் பல்வேறு தகுதி நிலைகளில் உள்ள அத்தனை பணி யாளர்களும் மிகுந்த ஒற்றுமையுடனும் புரிதலுடனும் செயற்பட வேண்டும்.
இங்கு முரண்பாடுகள் பெருகுமாயின் அதன் தாக்கம் பல்வேறு இடங்களில் திரும்பத் திரும்ப எதி ரொலிக்கும். இது சிறந்த சேவையை வழங்குவதற்கு பெரும் தடையாகும்.
இவ்வாறான தடைகளின் முடிவு நோயாளர்களின் பாதிப்பு என்பதாக முடியும் என்பதால் - யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் எவரும் பணிப்புறக்கணிப்பு என்ற போராட்ட நடைமுறையைத் தவிர்த்து, சேவையை வழங்குதல்; பேசித் தீர்த்தல் என்ற இலக்கோடு செயற்பட வேண்டும். இந்த செயற்பாடு மனித உயிர்களை பாதுகாக்கும் பெரும் தர்மமாகும்.