மன்னர் நல்லவராம், கூடின கூட்டம்தான் சரியில்லை என்கிறவகையில் சொல்லியிருப்பது, சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர்.
ஏற்கனவே மகிந்தர் மீது போர்க்குற்ற விசாரணை இல்லை, அவரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாத்துவிட்டேன், இனியும் பாதுகாப்பேன் என்று அதிமேதகு மைத்திரி அடிக்கடி சொல்லிவருகிறார்.
சிங்கள குடியேற்றங்கள், மகிந்தர் செய்த வேகத்திலேயே தொடர்ந்து நடக்கிறது. விகாரைகள் மகிந்தர் காலத்தை விட வேகமாக முளைக்கிறது. இராணுவ குடியிருப்புகள் சத்தமின்றி திறந்து வைக்கப்படுகின்றது. எமது ஊடகங்கள், மாற்றத்துக்கு வக்காலத்து வாங்கிய வெட்கத்திலோ என்னவோ அவை பற்றி பெரியளவில் பேசாது இருக்கின்றன.
தமிழ் நிலங்களில் இராணுவச்செறிவு (6:1) எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை. மாறாக, தமிழ் நிலங்களில் தற்காலிக கட்டடங்களில் இருந்த இராணுவமுக்காம்களில் பெரும்பான்மையானவை, தனியார் கட்டடங்களை விடுகிறோம் என்கிற போர்வையில், நிரந்தர கட்டுமானங்களாக அமைக்கப்பட்டுவருகிறது. அவை, இனி எப்போதும் நிரந்தரமானவை என்பதற்கு மேலாக, தனியார் கட்டடங்களை விட்டு இடமாற்றுமின்ற (இடம்மாற்றுகின்ற மட்டும்) இந்த நடவடிக்கைகளை தமிழர்களே வரவேற்க வைக்கப்படுகிறார்கள்.
அரச காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்ப்டுவது பிழையே இல்லை என்று (இராணுவ அடர்த்தி மாற்றப்படாதது குறித்த கரிசனை ஏதுமின்றி) மென்வலு போரளிகளும், ஊடகவியலாளர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலரும் வரிந்து கட்டிக்கொண்டு “நல்லெண்ணம்” பேசுகின்ற துயரமும் வளர்கிறது. காணிகள் சில விடப்பட்டுள்ளது உண்மை தான். அவை கூட மகிந்தர் காலத்திலேயே விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டவை என அதிகாரிகள் சொல்கின்றனர். இதற்கு மேலாக, வலிவடக்கில் ஆரம்பத்தில விடப்பட்ட காணிகளிற்கான சான்றிதழில் மகிந்தரினதும் அப்போதைய காணி அமைச்சரின் கையெழுத்துமே இருக்கின்றன) வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்தில் விடப்படுபவை மட்டும் தான் ஊதிப்பெருப்பித்து ஊடகங்களில் காட்டப்ப்டுகின்றன. வடக்கின் ஏனைய மாவட்டங்கள் குறித்தோ, தென்தமிழீழத்தில் அபகரிக்கப்பட்ட அபகரிக்கப்படுகின்ற காணிகள் குறித்தோ யாரும் பேசுவதில்லை. இவ்வளவு கதைக்கும் என்னிடம் கூட, வெட்கம்கெட்ட தனமாக, தென் தமிழீழம் குறித்த தரவுகள் இல்லை.
அதைவிட, விடப்பட்ட காணிகளின் அளவையும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் அளவையும் ஒப்பிட்டு பார்த்தால், உண்மை தானாக தெரியும் .
மகிந்தவிற்கு எதிராக குற்றசாட்டு எதுவுமில்லை – அரசு
வட்டுவாகலில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த தூபி
சனவரி 2015 இற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகள் விபரம்
அரசுமாற்றம் வந்தபோதும் அதனால் தமிழர்களுக்கு எந்த மாற்றமுமில்லை – பிரிஎப்
கடந்த காலத்தில் நடந்த மனித உரிமை, போர்க்குற்றம் 2015 வரை அதிதீவிரமாக கவலைப்பட்ட மேற்கு நாடுகள், தற்போது அதை மறந்து, இனி எதிர்காலத்தை பற்றி மட்டும் கதையுங்கள் என்று போதனை செய்கின்றன.2015 இற்கு முன்னும் பின்னுமாக தமிழ் மக்களுடனான அவர்களின் ஒவ்வொரு சந்திப்பும் , இந்த மாற்றத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. இன்னொருவகையில் 2015 வரைக்கும் அவர்களுக்கு மிகத்தேவையாக இருந்த தமிழரின் குரல், தற்போது, தேவையற்ற இடைஞ்சலான சத்தம் ஆகிவிட்டது.
அப்படி, சர்வதேசத்துக்கு தேவையாக இருந்த வேளையில் எமக்கானதை கேட்டு, அதற்கு ஒரு பேரத்தை பேச எமது தலைவர்களாலும் முடிந்திருக்கவில்லை.
ஆக மொத்தத்தில் மாற்றத்தின் அர்த்தம், மகிந்தரை மாற்றுவது மட்டும் தான் என்பதாகிவிட்டது.
கூட்டிக்கழித்து பார்த்தால், சிங்கள தேசம் எதையும் இழக்கவில்லை. மாறாக, பல்வற்றை சம்பாதித்திருக்கிறது. இரத்தக்கறை படிந்திருந்த இராணுவ வெற்றியை, மிக சாதுரியமாக, ஒரு அரசியல் வெற்றியாக மாற்றி இருக்கிறது. எம் மக்களில் கணிசமானோரை, எம் அரசியல்வாதிகளின் துணையுடன், ராஜதந்திரம், யதார்த்த அரசியல் என்கிற பெயரில் தம்மை நோக்கி இழுத்து, அதற்கும் மேலாக தமக்காக கதைக்கவும் பண்ணியிருக்கிறது.
அதற்கும் மேலாக, மிக முக்கியமாக அவர்களை தமிழ் தேசிய உணர்வு நீக்கம் செய்திருக்கிறது. விளையாட்டு, கலை, இலக்கியம், கொண்டாட்டம், பண்பாடு என அனைத்து தளத்திலும் சிங்கள தேசம் இந்த அரசியலை செய்ய, அவற்றையெல்லாம் அரசியலாக பார்க்க கூடாது, விளையாட்டு விளையாட்டு தான், இலக்கியம் இலக்கியம் தான் என்று போதிப்பது தான் புத்திஜீவித்தனம் என நம்புகின்ற ஒரு குழுமமே எமக்குள் வேர்விடுகின்றது. சிறிலங்கா சுதந்திர தினத்தை இரத்ததானம் செய்து கெளரவமாக தாயகத்தை நேர்ந்த தமிழ் சனசமூக இளைஞர்கள் கொண்டாடியதாகவும் பத்திரிகைகள் தெரிவித்து இருந்தது.
இது தான் உண்மையில் அவர்களது வெற்றி, முள்ளிவாய்க்காலில் பெற்றது அல்ல. இது தான் உண்மையான மாற்றம்.
மறுபுறமாக , தமிழர் தேசம் நிஜமாகவே பெற்றது என்ன??? எமது தீர்வுக்கான திறவுகோலாக அமையும் என கருதப்பட்ட, சர்வதேச விசாரணையை ஒன்றுமில்லாததாக்கியதை விட தமிழர் தேசம் பெற்றது என்ன?? எம்மிடம் இருந்த துரும்பு சீட்டுகள் அனைத்தையும், நிபந்தனையற்று இழந்ததை விட, தமிழர் தேசம் பெற்றது என்ன?
இதை யாரையும் சீண்டி குறை சொல்லுதற்காக எழுதவில்லை. யாரையும் வீண்விவாதத்துக்கு இழுப்பதற்கும் இது எழுதப்படவில்லை. நாங்கள் அனைவரும் எங்களுக்குள்ளேயே சிந்தித்து தெளிவு பெறவேண்டும் என்பதற்காக மட்டும் எழுதப்பட்டது.
படங்கள் & தகவல்கள் – பிரித்தானிய தமிழர் பேரவை