இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் – க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் கார்டியன் இணையதளம் வெளியிட்ட செய்தியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தியமைக்கு வலுவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போர் இடம்பெற்ற பகுதிகளில் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் சர்தேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்களை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டிருக்கும் குறித்த செய்தி பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இறுதிப் போரின்போது க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நேரில் பார்த்த – அந்தக் குண்டுகளின் பாதிப்பை உணர்ந்த தமிழர் தரப்பினர் முன்வந்து சாட்சியமளிப்பது அவசியமாகின்றது. அந்தக் கடமையைத் துணிந்து செய்ய முன்வந்தார் கனடாவில் உள்ள வன்கூவரில் வசிக்கும் சுரேன் கார்த்திகேசு.
இறுதிப் போரின்போது, 2009 மே, 17 வரைக்கும் முள்ளிவாய்க்கால் வரை முள்ளிவாய்க்காலில் இருந்த பத்திரிகையாளரே சுரேன். அவ்வாறு செய்தி சேகரிக்க சென்றிருந்தவேளையில் 2009 ஏப்ரல் 25 ஆம் திகதி படுகாயமடைந்து, உயிர்தப்பி வந்த மிக முக்கியமான போரின் சாட்சியங்களுல் இவரும் ஒருவர். இறுதிப் போரின் போது மிக்29 ரக விமானங்களில் இருந்து பொதுமக்கள் வாழிடங்கள் மீது வீசப்பட்ட க்ளாஸ்டர் குண்டுகள் பற்றிய செய்தி அறிக்கையிடலை சுரேன் செய்திருக்கின்றார்.
சுரேனின் செய்தி சேகரிக்கும் படம்
சுரேனின் காயப்பட்ட படம்
ரெண்டாவது முறை குண்டுத் தாக்குதல் நடக்கேக்க நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிற்றன். றோட்டில ஒரு சனம் கூட இல்லை. இந்தத் தாக்குதலில யாரும் காயப்பட்டிருந்தால் கிளிநொச்சி – தருமபுரம் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு வரவேணும். எனவே நான் தருமபுரம் ஆஸ்பத்திரிக்குப் போனன். ஆனால் அங்க காயப்பட்டவங்கள் யாரும் வரேல்ல எண்டு ஆஸ்பத்திரில வேலை செய்த ஆக்கள் எனக்கு சொல்லிச்சினம். . அவையளும் ஆஸ்பத்திரி வாசலிலதான் நிற்கினம். நான் திரும்பி சுண்டிக்குளம் சந்தியால் கல்லாறு பக்கமா என்ர மோட்டர் சயிக்கிள்ல போய்க்கொண்டிருந்தன். அந்த நேரம் பார்த்து மோட்டர் சயிக்கிளுக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது. அப்பிடியே நிண்டிட்டுது. அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..?
உதவி செய்யிற மனமிருந்தாலும், மருந்துக்கு கூட மண்ணெண்ணெய் யாரிட்டயும் இருக்கேல்ல. மோட்டார் சயிக்கிள சரிச்சா கொஞ்சத்தூரம் ஓடலாம். நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு மோட்டர் சயிக்கிள் தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமா வந்தது. அந்த மோட்டார் சயிக்கிளில பின்னுக்கு இருந்தவர் கத்தி அழுதுகொண்டு போனார். நான் உடன அவயள பின்தொடர்ந்து போய், ”அண்ணை எங்க கிபிர் அடிச்சது? காயப்பட்ட ஆக்கள் இருக்கினமோ” என்று கேட்டன்.
” எனக்கு தெரியேல்லை. ஆனா நிறைய சனம் கத்துற சத்தம் மட்டும் கேட்குது”.
அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது காயப்பட்டு, றோட்டால ஓடிவந்த ஒராளைத்தான் அந்த மோட்டர் சயிக்கிளில ஏத்திக்கொண்டு வாறார் எண்டு. உடன ஆஸ்பத்திரிக்குப் போனால் காயமடைஞ்ச ஆக்களின்ர முழுவிபத்தையும் எடுக்கலாம் எண்டு யோசிச்சி, அங்க போனன். “எனக்குப் பெரிய காயம் இல்லை. ஆனால் முகாமுக்குள்ள தான் குண்டுகள் விழுந்தது. அதில் நிறைய பேர் எங்க ஓடினாங்கள் எண்டும் தெரியாது. முகாமை சுற்றி வாய்க்கால் இருக்கு. கழுத்தளவு தண்ணிக்குள்ளால வரமுடியாமல் காயமடைஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம். நான் ஒருமாதிரி தப்பியோடி றோட்டுக்கு வந்தே, இந்த மோட்டார் சயிக்கிளில ஆஸ்பத்திரிக்கு வந்தன்” என்றார் கத்திக்கொண்டு வந்தவர்.
காயப்பட்டவர் படம்
அதுக்குப் பிறகுதான் ரெண்டு அம்புலன்ஸ் அனுப்பி காயப்பட்ட ஆக்கள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தது.
- காயப்பட்டவர் படங்கள்
- காயப்பட்டவர் படங்கள்
- காயப்பட்டவர் படங்கள்
- காயப்பட்டவர் படங்கள்
இடம்பெயர்ந்த ஆக்களுக்கு அப்பத்தான் வீடுகள் கட்டிக் குடுத்திருக்கினம். சில ஆக்கள் கட்டிக்கொண்டிருக்கினம். அதுக்குள்ள தான் மிக் குண்டு போட்டது. சில குண்டுகள் வெடிச்சாலும் அதின்ர பகுதிகள் சிதிறிப் போய் கிடந்தது.
க்ளாஸ்டர் குண்டுகளின் படம்
க்ளாஸ்டர் குண்டுகளின் படம்
க்ளாஸ்டர் குண்டுகளின் படம்
அதை நாங்கள் போட்டோ எடுக்கேக்கத்தான். அந்த இடத்தில் நிண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களை சேர்ந்த போராளிகள், “இதுதான் க்ளாஸ்டர் குண்டு எண்டாங்கள். இது சண்டைகளில பயன்படுத்த தடை” எண்டும் சொல்லிக் கொண்டிருந்தாங்கள்.
க்ளாஸ்டர் குண்டுகள் பற்றிய டப்ளின் தீர்ப்பாய குறிப்புஅதுக்குப் பிறகு விமானத் தாக்குதல்கள் நடக்கிற இடங்களில செய்தி சேகரிக்கப் போகேக்க அவதானமா இருந்தம். முள்ளிவாய்க்காலிலயும் இதேமாதிரியான க்ளாஸ்டர் குண்டுகள் வீசப்பட்டது.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி டப்ளினில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராஜதந்திரிகள், க்ளாஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். அன்றிலிருந்து போர்களில் க்ளாஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது போரியல் விதிமுறைகளை மீறும் செயலாகக் கருதப்பட்டு வருகின்றது. அத்துடன் தடைசெய்யப்பட்ட க்ளாஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகவு கொள்ளப்படுகின்றது.
குண்டுகளின் படம்
சாட்சிக்கு தயாராகவுள்ள பத்திரிகையாளர் சுரேன்
தமிழர் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க வெளிநாட்டு ஊடகங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் மட்டுமே போதாது. பத்திரிகையாளர் சுரேன் கார்த்திகேசு போல இன அழிப்பை நேரில் பார்த்த பலரும் சாட்சியங்களாக மாறவேண்டிய காலம்தான் இது.
ஜெரா