கல்வித் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி தனியாருக்கு வழங்க முயற்சி! மக்கள் கடும் எதிர்ப்பு

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்கும் வகையில் இன்று திங்கள் கிழமை நில அளவை மேற்கொள்ளும் முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி உதயநகர் மேற்கில் கடந்த சில வருடங்களுக்கு முன் சுமார் நான்கு ஏக்கர் பொதுக் காணி கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டது.
கல்வித் திணைக்களத்திற்கு சொந்தமாக ஒரு காணி இல்லாத நிலைமையினை கருதி மேற்குறித்த காணி ஒதுக்கப்பட்டு வலயக் கல்வித்திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சுற்று வேலியும் அமைக்கப்பட்டு பிரதேச பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களால் பொது சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த காணியை தற்போது கால் ஏக்கர் வீதம் தனியாருக்கு வழங்கும் வகையில் அதிகாரிகளால் எடுக்கப்படும் முயற்சிக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
தங்களுடைய பிரதேசத்திற்கு பல்வேறு பொது தேவைகளின் நிமிர்த்தம் காணிகள் தேவைப்படுவதாகவும், நகரை அண்டிய பிரதேசத்தில் இனிவரும் காலங்களில் சிறுதுண்டு பொதுக் காணிகளையேனும் பெற்றுகொள்ள முடியாத நிலையில் சுமார் நான்கு ஏக்கர் பொதுக் காணியை தனிநபர்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக வழங்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பிரதேச பொது மக்கள்,
உதயநகர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்ற பலர் இன்றும் சொந்த காணியின்றி இருக்கும் நிலையில் தாங்கள் குறித்த காணியை பொதுத் தேவை கருதி பாதுகாத்து
வந்ததாகவும் ஆனால் இன்று தன்னிச்சையாக சிலர் வேறிடங்களில் உள்ள தனிநபர்களுக்கு தாரைவார்க்க முனைவது நியாயமற்றது எனவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே குறித்த காணியை வலயக் கல்வித்திணைக்களம் பொறுப்பேற்க விரும்பாது விடின் அதனை கிராமத்தின் அல்லது மாவட்டத்தின் பொதுத் தேவைக்கு பயன்படுத்துங்கள் அல்லது கிராமத்தில் காணியின்றி வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு வழங்குங்கள். அதனைவிடுத்து வேறிடத்து தனிநபர்களுக்கு காணியை பகிர்ந்தளிக்கும் முயற்சினை மேற்கொள்ளாதீர்கள் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு,
தங்களுடைய கோரிக்கை ஏற்றுகொள்ளாத பட்சத்தில் மக்களாகிய தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நில அளவை மேற்கொள்ள வருகைதந்த அதிகாரிகள் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக தங்களது நில அளவை முயற்சியை கைவிட்டு சென்றுள்ளனர்.​


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila