கம்பஹா மாவட்டத்தின் கனேமுல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிவில் உடையில் வந்த கனேமுல்ல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் தனது வீட்டிற்கு வந்து தனது கணவரை வெளியில் இழுத்துச்சென்று இரத்தம் கொட்டும் அளவிற்கு மோசமாகத் தாக்கியதாக அவரது மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.
எந்தவித காரணமும் இன்றி தனது கணவரை பொலிசார் தாக்கியதாக தெரிவித்த பெண், குறித்த பொலிஸாருக்கு எதிராக கம்பஹா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடமும் முறையிட்டுள்ளார்.
கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த அருணசாந்த நிரோஷன் என்ற நபருக்கு பிடியாணை இருப்பதாகவும் தனது கணவருக்கும் அதே பெயர் என்பதாலேயே இந்த தவறு இடம்பெற்றுள்ளதாகவும் கனேமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பிடியாணை இருப்பதற்காக ஒருவரைக் கைதுசெய்து தாக்குவதற்கு பொலிஸாருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாகவும் அதில் பெரும்பாலான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராகவே இருப்பதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.