உலகப் போரின் நினைவும் பொறிஸ் ஜோன்சன் நிலையும் (இரண்டாம் இணைப்பு)

 

பிரித்தானியாவின் படைத்துறை வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய முதலாம் உலகப் போரில், இடம்பெற்ற பிரான்சின் “சொம்” சமர்களத்தின் ஆரம்ப நாளுக்கு இன்று நூற்றாண்டு நினைவு.
“பிரெக்சிற்”; அதிர்வுகள் எவ்வாறிருந்தாலும் சொம்” சமர்களத்தின் நினைவு நிகழ்வுகள் இன்று பிரித்தானியா, பிரான்ஸ்- ஆகிய நாடுகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.
சொம் சமர்க்களம் பெரும் பேரழிவைத் தந்தாலும் எதிராளியான ஜேர்மனியப் படையினரை எப்படியும் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்துடன் பிரித்தானியர்கள் போரிட்டதால் அது வரலாற்றில் பதிவானது.
ஆனால், சமகால பிரித்தானிய அரசியல்களத்தில் தனது சொந்தக் கட்சிக்குள் உருவான எதிராளிகளைச் சமாளிக்க முடியாமல் தலைமைத்துவப் போட்டியில் பொறிஸ் ஜோன்சன் பின் வாங்கியது ஏன்? என்பதே இப்போதுள்ள முக்கியவினா.
அவரே, மறைமுகமாக குறிப்பிடுவதுபோல கொன்சவேட்டிவ் கட்சியை ஒன்று படுத்துவதற்கான பின்வாங்கலா? அல்லது பிரெக்சிற் பின்னதிர்வுகளைச் சந்திக்கப் போகும் பிரித்தானியாவை கொண்டு நடத்தும் பொறுப்பிலிருந்து பின்வாங்கலா? என்பதும் ஆர்வத்துக்குரிய வினாக்கள்.
தொழினுட்பரீதியாக நோக்கினால் திரேசா மே என்ற போட்டியாளரை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களில் கடந்த ஒருவாரகாலமாக பொறிஸ் ஜோன்சன் ஈடுபட்டமை வெளிப்படையானது.
ஆனால் கடந் தவாரம் வரை, கட்சியின்  தலைமைத்துவ போட்டிக் களத்தில் தனது பெயர் வரவே வாய்ப்பு இல்லை. தலைமையமைச்சர்க் கனவும் இல்லை. எனக்கூறிய பொறிஸ் ஜோசனின் நெருங்கிய பிரெக்சிற் சகாவான மைக்கல் கோவ் இறுதி நேரத்தில் அதே போட்டிக்களத்தில் குதித்தமை உண்மையில் ஒருஅதிரடிதான்.
பிரித்தானிய ஊடகங்கள் அல்லது பொறிஸ் ஜோன்சனின் தந்தை கூறுவது போல இது நீயுமா புரூட்டஸ்?  பாணியில் முதுகில் கத்தி பாய்ச்சிய ஒரு சதியாகக்கூட இருக்கலாம்.
ஆனால் மைக்கல் கோவ் இதற்கொரு காரணத்தைக் கூறுகிறார். பொறிஸ் ஜோன்சன் நாட்டைக் கொண்டு நடாத்தக் கூடிய ஆளுமையுள்ள ஒரு தலைவர் அல்ல என்கிறார் அவர்.
இதற்குள் இன்னொரு விடயமும் உள்ளது. பிரெக்சிற் நண்பர்களை துண்டாடும் வகையில் தனது துணைவரான மைக்கல் கோவுக்கு அவரது மனைவியே தலைமைத்துவ ஆவலைத் தூண்டிவிட்டதாகவும் கூறப்பட்டது.( மனைவி சொல்லே மந்திரம்?)
பொறிஸ் ஜோன்சன் குறித்து கூடுதல்அவதானம் எடுக்க வேண்டுமென்ற பாணியில் கோவின் மனைவி எழுதிய மின்னஞ்சல் தற்செயலாக நேற்று முன்தினம் கசிந்து இதனை ஆதாரப்படுத்தியது.
சரி இப்போது தனது பிரெக்சிற் சகாவை முதுகில் குத்தி தள்ளிவிட்டு போட்டியாளராக உருவெடுத்துள்ள மைக்கல் கோவ் தனது பிரதான போட்டியாளரான திரேசா மே யை வீழ்த்துவாரா என்பதுதான் வினா.
ஏனெனில் உள்ளே வெளியே ஆட்டமான பிரெக்சிற் களத்தால் பிளவடைந்துள்ள கொன்சவேட்டிவ் கட்சியை  ஒருங்கிணைப்பதிலும்,  தலைமையமைச்சர் டேவிட் கமரனுக்கு பின்னர் நம்பர் 10 இற்குள் குடிபுகுவதிலும் மைக்கல் கோவை விட  திரேசா மே சாமர்த்தியமானவராகவே கருதப்படுகிறார்.
பிரித்தானிய பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை : போரிஸ் ஜொன்சன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்பதில் முன்னோடியாக செயற்பட்டிருந்த முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜொன்சன், தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதில்லை எனும் அதிரடி முடிவை தெரிவித்துள்ளார்.
போரிஸின் இந்த அதிரடி முடிவு, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேற்குறித்த முடிவினை அவர், நேற்று (வியாழக்கிழமை) மத்திய லண்டனில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விளக்கம் அளித்த போது, “எனது சகாக்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் நிலவும் சூழ்நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டு பிரித்தானியாவை நகர்த்திச் செல்லும் பிரதமர் எனும் பதவிக்கு நான் பொருத்தமில்லை என தீர்மானித்துள்ளேன்”  என தெரிவித்தார்.
பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பில் முழுமுயற்சியுடன் போரிஸ் செயற்பட்டமையால், அவரே இனிவரும் காலங்களில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் எனவும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தலைமை தாங்குவார் எனவும் அனைவராலும் கருதப்பட்டது.
போரிஸின் இந்த அறிவிப்பு பிரித்தானியா மற்றும் ஏனைய உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பில் பல வகையான கருத்துக்கள் பரிமாறப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்த்க்கது.
பிரித்தானியாவின் வெளியேற்றமே, ஸ்ரேலிங் பவுணின் பெறுமதி வீழ்ச்சி, உலக சந்தையில் பாதிப்பு, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் பெறும் முயற்சி மற்றும் நடப்பு பிரதமர் டேவிட் கமரன் பதவி விலக தீர்மானம் மேற்கொண்டமை ஆகிய அனைத்திற்கும் பிரதான காரணமாக அமைந்தது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila