ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்கையில் இந்த கொத்தணிக் குண்டுகள் குறித்து பிரஸ்தாபித்திருந்தார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது அண்மைய கால அறிக்கைகளில் புதிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டு குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. கோருகின்றது என்று வாய்மூல அறிக்கையின் 33வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுத்த காலத்தில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டனவா? இல்லையா என்பது தொடர்பில் நாட்டில் பாரிய வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் இந்த கொத்தணிக் குண்டு விவகாரம் தொடர்பில் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அதாவது யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினருக்கு கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால், இராணுவத் தேவையின்படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என்று காணாமல்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் யுத்தம் முடிவடைந்தபோது கொத்தணிக்குண்டு பயன்பாட்டுத்தடை அமுலில் இருக்கவில்லையென்பதை பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணையின் பிரகாரம் வெளிப்படுத்தியுள்ளோம் என்பதை வலியுறுத்துகிறோம். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது எனவும் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
தருஷ்மன் அறிக்கையிலும் இவ்வாறு கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான மூலங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இலங்கை இராணுவம் அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன் அந்த மறுப்பானது அந்தநேரம் ஐ.நா.வினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை எமது ஆணைக்குழு அவதானித்திருந்தது என்றும் காணாமல்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? இல்லையா என்பது தொடர்பான சர்ச்சை நிலவிவருகின்ற சூழலில் மெக்ஸ்வெல் பரணகம இவ்வாறானதொரு கருத்தினை தெரிவித்துள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது, காணமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கடந்த 2014ம் ஆண்டு இரண்டாவது ஆணையொன்று அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
அதாவது யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா? போர்க் குற்றங்கள் நடந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரணகம ஆணைக்குழுவிற்கு கடந்த அரசாங்கத்தினால் ஆணை வழங்கப்பட்டது.
அந்த இரண்டாவது ஆணைக்கு அமைய கடந்த வருடம் பரணகம ஆணைக்குழு அறிக்கையையும் அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தது. அதன்படி குறித்த இரண்டாவது ஆணைக்கு ஏற்பவே மெக்ஸ்வெல் பரணகம இந்த கொத்தணிக்குண்டு விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதாவது, கொத்தணிக் குண்டுகள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும் அது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்திருந்த நிலையிலேயே பரணகம இவ்வாறான கருத்தைக் கூறியிருக்கின்றார்.
மேலும் கொத்தணிக் குண்டு விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளிவந்த போது அரசாங்கப் படைகளால் எந்த வகையிலும் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட வில்லை என்றும், அரசாங்கத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் எக்காரணத்தைக் கொண்டும் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை என்பது எமக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
அத்துடன், கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் இலங்கையிலிருந்து எடுக்கப்பட்டன என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? அதுமட்டுமன்றி, இது இலங்கை இராணுவத்தினுடைய கொத்தணிக்குண்டுகள் என எவ்வாறு கூற முடியும்? இது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும். அதுமட்டுமன்றி, இந்த புகைப்படங்களில் இருக்கும் கொத்தணிக்குண்டுகள் இராணுவத்தினுடையதா அல்லது புலிகளுடையதா என யாருக்குத் தெரியும்? மேலும் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த பின்னர் தற்போது ஏன் இவற்றை வெளியிட வேண்டும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பல கேள்விகளை இந்த விடயத்தில் எழுப்பியிருந்தார்.
அரசாங்கம் கொத்தணிக்குண்டு குற்றச்சாட்டை முழுமையாக இவ்வாறு மறுத்துள்ள நிலையில் யுத்தத்தின்போது கொத்தணிக் குண்டுகளை பயன்டுத்தியிருந்தாலும் அதில் தவறு இல்லை என காணாமல்போனோர் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை தற்போது புது சர்ச்சையை தோற்றுவிப்பதாக அமைந்திருக்கின்றது.
கொத்தணிக் குண்டுப் பாவனை தொடர்பில் சர்வதேச சட்டங்கள் எதனை கூறினாலும் அவற்றை யுத்தத்தின்போது பயன்படுத்துவது யுத்த விதிமுறைகளுக்கே அப்பாற்பட்டதாகக் கருதப்படுகின்றது. எனவே இது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற விடயத்தின் கீழ் வரும் ஒரு அம்சமாக காணப்படுகிறது.
எனவே, தற்போது அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் நம்பகத்தன்மையான விசாரணையை நடத்த வேண்டியது அவசியமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசேனும் இந்த விடயத்தை மிகவும் ஆணித்தரமான முறையில் தனது வாய்மூல அறிக்கை ஊடாக வலியுறுத்தியிருக்கின்றார்.
எனவே, அரசாங்கம் தாமதிக்காமல் இது தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். விசேடமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் இது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
அதாவது இது போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையினால் வெறுமனே உள்ளக விசாரணையினூடாக இதற்கான நீதியை பெற முடியுமா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்திருக்கின்றது. அதனால், அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் தொடர்பிலும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதாவது கொத்தணிக்குண்டுகள் உண்மையில் யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும். இதில் பொது மக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.எனவே, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நம்பகரமான விசாரணையை முன்னெடுப்பதே அனைத்திற்கும் பதில் கூறுவதாக அமையும்.
2009ம் ஆண்டு கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது அல்ல என்று கூறிவிட்டு, இந்த விடயத்தை வெறுமனே விட்டுவிட முடியாது. இது தொடர்பில் மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை நிலைமை தொடர்பான விசேட உப–குழுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, யுத்தத்தின்போது கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர் பில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்திருந்தார்.
எனவே, இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு அரசாங்கம் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நம்பகரமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.