பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சட்ட நிபுணர் மனோரி முத்தெட்டுவ தலைமையிலான விசேட செயலணி, இன்று மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை செவி மடுத்தது. 2011 ஆம் ஆண்டு நவம்பர் 31 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வந்து 1800 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்களில் அனைவரும் இன்னமும் அவர்களது வீடுகளுக்கு சென்றடையவில்லை என்றும் தெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளரான பிரிட்டோ பெர்னாண்டோ, விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். குறைந்தபட்சம் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலையாவது வெளியிட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்காக ஏதாவது செய்கின்றது என்ற நம்பிக்கை வரும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஏராளமானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். சரணடைந்தவர்களை அவர்களது மனைவிமாரே படையினரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் படையினரும், அரசாங்கமும் இதனை ஏற்க மறுத்து வருகின்றது. அதனால் சரணடைந்தவர்களை படையினரிடம் நேரடியாக ஒப்படைத்தவர்கள் பெரும் குழப்பத்திலும், யாரை நம்புவது என்று தெரியாமலும் இருக்கின்றனர். இதனால் அரசாங்கம் அல்லது இந்த விசேட செயலணியாவது இதில் தலையிட்டு சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். அது மாத்திரமன்றி 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் போராளிகள் 1800 பேர் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளுக்குத் திரும்பவில்லை. குறைந்தபட்சம் அவர்களின் பட்டியலையாவது வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல்போனோர் விடையத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் எழுவதற்கு இந்த விடையங்களே பிரதானமாக இருக்கின்றன. அதனால் அரசாங்கம் நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். காணாமல்போனோர் தொடர்பில் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது அமைப்புக்கள் தெளிவுபெற்றுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை தெளிவில்லாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் பிரிட்டோ பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். |
சரணடைந்த புலிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை!
Related Post:
Add Comments