பரவிப்பாஞ்சான், காணிகளை பார்வையிட இராணுவம் மறுப்பு


கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான், இரணைதீவு பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்படுவதாக காணி உரிமையாளர்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

சொந்த நிலங்களை பார்வையிட அனுமதிக்குமாறு மக்கள் விடுக்கும் கோரிக்கையினை மட்டுமல்லாமல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைமைகள் விடுக்கும் கோரிக்கையினையும் கடற்படையினர் நிராகரித்து வருகின்றனர்.

ஆனால் தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் சிங்கள மீனவர்களுக்கு இறால் நண்டு பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியில் சுமார் 180 ஏக்கர் மக்களுடைய நிலம் படையினருடைய கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.

இந்நிலையில் தமது நிலங்களை எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வந்து பார்வையிட்டு அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் தங்களுடைய நிலத்தை பார்ப்பதற்கும், வீடுகளை பார்ப்பதற்கும் படையினர் முழுமையாக அனுமதி மறுத்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேபோன்று கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலார் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு மக்களும் கடற்படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.  கடந்த 1990 ஆம் ஆண்டு தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேறிய நிலையில் தமது சொந்த நிலத்தை பார்வையிட கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.


குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் கருத்து தெரிவிக்கையில், பரவிப்பாஞ்சான் பகுதிக்கு சொந்தமான மக்கள் அவர்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்படாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. 

இதில் சுமார் 60 வரையான குடும்பங்கள் காணிகளுக்கான ஆவணங்களை வைத்திருக்கின்ற போதிலும் படையினர் மக்களுடைய நிலத்தை விடுவிக்க தயாராக இல்லையென குறிப்பிட்டார்.

அத்துடன் இரணை தீவு மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 400 குடும்பங்களுக்கான வீடுகள், கால்நடைகள், மற்றும் பெறுமதியான பயன்தருமரங்கள் காணப்படும் நிலையில் மக்கள் தங்கள் நிலத்திற்கு செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கின்றனர். 

ஆனால் குறித்த பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையினருடன் தங்கியிருந்து கடற்றொழில் செய்கிறார்கள். 

எனினும் தமிழ் மக்களுக்கு அந்த கடலில் தொழில் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் தெரிவித்தார்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila