மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இரண்டாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாலை வரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்ற போது பல்வேறு தடயப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது பாவிக்கப்படாத துப்பாக்கி ரவை -01 எலும்புத்துண்டுகள் -03, உறப்பை, கம்பித்துண்டுகள் என மேலும் பல தடையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அகழ்வின் போது கிணற்றில் நீரின் பெறுக்கெடுப்பு அதிகரித்ததன் காரணமாக தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாலை 5.35 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 3 ஆவது தடவையாக நாளை(புதன் கிழமை) காலை 8.30 மணிக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்படவுள்ளது. மாந்தை மர்ம கிணறு : சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள் மீட்பு மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி, இரண்டாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்ற நிலையில், சநதேகத்திற்கிடமான வகையில் பல தடயப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் 11 மணிவரை இடம்பெற்ற அகழ்வின் போது, குறித்த கிணறு 100 சென்றிமீற்றர் வரை அகழ்வு செய்யப்பட்டுள்ளது. இதன்போது மனிதப் பல், முள்ளுக்கம்பி துண்டுகள், கற்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இவ் அகழ்வுப்பணியின்போது, 13 அரச திணைக்களங்களின் அதிகாரிகள், காணாமல் போன உறவுகள் சார்பாக, சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா ஆகியோரும் பிரசன்னமாகியுள்ளனர். குறித்த அகழ்வுப் பணிகள் மீண்டும் இன்று மாலை நடைபெறவுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.